வெள்ளத்தில் மிதக்கும் கேரளா பெங்களூரு மண்டல ரெயில்வே சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு


வெள்ளத்தில் மிதக்கும் கேரளா பெங்களூரு மண்டல ரெயில்வே சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 20 Aug 2018 4:45 AM IST (Updated: 19 Aug 2018 11:53 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவுக்கு பெங்களூரு மண்டல ரெயில்வே சார்பில் நேற்று நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

பெங்களூரு, 

வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவுக்கு பெங்களூரு மண்டல ரெயில்வே சார்பில் நேற்று நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

கேரளாவுக்கு நிவாரண பொருட்கள்

கனமழையின் காரணமாக கேரள மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அங்கு வசித்து வரும் மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கேரள மக்களுக்காக பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகிறார்கள். நிவாரண நிதி வழங்குவதுடன், மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், உடை உள்ளிட்டவை லாரிகளில் அனுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில், பெங்களூரு மண்டலத்தில் பணி செய்யும் ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், தென்மேற்கு ரெயில்வே மகளிர் அமைப்பு, சாரண–சாரணியர் இயக்கம் சார்பில் நேற்று கேரள மக்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. பொருட்களை தென்மேற்கு ரெயில்வேயின் பெங்களூரு மண்டல மேலாளர் சக்சேனா, தென்மேற்கு ரெயில்வேயின் மகளிர் அமைப்பு தலைவி வந்தனா சக்சேனா, ஊழியர்கள், அதிகாரிகள் இந்த நிவாரண பொருட்களை பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து வாராந்திர சரக்கு ரெயில் மூலம் அனுப்பினர்.

பொருட்களின் விவரம்

நிவாரண பொருட்களாக 25 கிலோ எடை கொண்ட 65 அரிசி மூட்டைகள், 50 கிலோ எடை கொண்ட 69 ரவை மூட்டைகள், 50 கிலோ எடை கொண்ட 29 கோதுமை மூட்டைகள், 210 கிலோ வெங்காயம், 15 கிலோ எடை கொண்ட 15 எண்ணெய் டின்கள், 100 தண்ணீர் கேன்கள், 200 கிலோ பருப்புகள், 750 தண்ணீர் பாட்டில்கள், 20 கிலோ பால்பவுடர், 40 கிலோ டீதூள், பற்பசைகள்–பிரஷ், 30 கிலோ வெல்லம், சர்க்கரை 50 கிலோ, 2 ஆயிரம் போர்வைகள், 1,200 கம்பளிகள், நாப்கின்ஸ், குழந்தைகளுக்கான உள்ளாடைகள், ஆடைகள், குளுக்கோஸ், மாத்திரைகள், மெழுகுவர்த்திகள், சலவைப்பொடி, மிளகாய்பொடி, ரசப்பொடி, சாம்பார்பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அனுப்பப்பட்டன.

இதுகுறித்து பெங்களூரு மண்டல ரெயில்வே மேலாளர் சக்சேனா கூறுகையில், ‘சரக்கு ரெயில் மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இந்த பொருட்களை அந்த மாவட்ட கலெக்டர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வினியோகம் செய்வார்‘ என்றார்.


Next Story