கடந்த சில நாட்களாக மிரட்டி வந்த திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் இடிந்து விழுந்தது


கடந்த சில நாட்களாக மிரட்டி வந்த திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 19 Aug 2018 11:15 PM GMT (Updated: 19 Aug 2018 6:44 PM GMT)

கடந்த சில நாட்களாக மிரட்டி வந்த திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் இடிந்து விழுந்தது. வெள்ளப் பெருக்கை சமாளிக்க முடியாமல் போனதால் 90 வயது பாலத்தின் ஆயுள் முடிவுக்கு வந்தது.

திருச்சி,

திருச்சி நகர பகுதிகளையும், நம்பர் ஒன் டோல்கேட் பகுதியையும் இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இரும்பு பாலம் மிகவும் பழமையானதாகும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1924-ம் ஆண்டு இதன் கட்டுமான பணி தொடங்கி 1928-ம் ஆண்டு திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. அப்போது சென்னை மாகாணத்தின் நிர்வாக குழு உறுப்பினராக இருந்த டி.இ. மோர் என்ற ஆங்கிலேய அதிகாரி இந்த பாலத்தை திறந்து வைத்தார்.

800 மீட்டர் நீளம் உள்ள இந்த பாலத்தை 24 தூண்கள் தாங்கி நிற்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. பொதுவாக பாலங்களின் பக்கவாட்டு சுவர்கள் ‘கான் கிரீட்’ சுவர்களால் கட்டப்படுவது தான் வழக்கம். ஆனால் இந்த பாலத்தின் இருபுறமும் பக்கவாட்டில் சுவர்கள் எழுப்பப்படாமல் அதற்கு பதிலாக ஒரு வகையான எஃகு இரும்பு மூலம் உருவாக்கப்பட்டு இருந்தது. இதனால் தான் இந்த பாலத்திற்கு கொள்ளிடம் இரும்பு பாலம் என பெயர் வந்தது.

இந்த பாலத்தின் வலுவிழந்த தன்மை மற்றும் பழமையை கருத்தில் கொண்டு கடந்த 2012-ம் ஆண்டு இந்த பாலத்தின் வழியாக பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. கார்கள் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வகானங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டன. கனரக வாகனங்கள் சென்னை பைபாஸ் சாலையில் உள்ள பாலத்தின் வழியாக மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

பின்னர் இரும்பு பாலத்தின் அருகிலேயே புதிதாக நான்கு வழிப்பாதையுடன் கூடிய புதிய பாலம் கட்டப்பட்டதை தொடர்ந்து இந்த பாலம் நிரந்தரமாக மூடப்பட்டது. வாகனங்கள் செல்வதற்கு தகுதியற்றதாக நெடுஞ்சாலை துறை சார்பில் அறிவிக்கப்பட்டாலும் இந்த பாலத்தின் வழியாக அந்த பகுதியை சேர்ந்த உள்ளூர் பொதுமக்கள் இதனை நடந்து செல்வதற்கும், இருசக்கர வாகனங்களில் செல்வதற்கும் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் கடந்த 12-ந்தேதி முதல் வினாடிக்கு சுமார் 40 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. முக்கொம்பு மேலணையில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக வினாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கப்பட்டதால் கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளையும் தொட்டபடி பேரிரைச்சலுடன் சென்றது. இப்படி சீறிப்பாய்ந்த தண்ணீரால் கொள்ளிடம் இரும்பு பாலத்தை தாங்கி நின்ற 18-வது தூணில் கடந்த 15-ந்தேதி இரவு திடீரென விரிசல் ஏற்பட்டது.

இதனை அறிந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பாலத்தில் யாரும் நடந்து கூட செல்ல முடியாத வகையில் இருபுறமும் தடுப்புகளை ஏற்படுத்தினார்கள். பாலம் முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மறு நாள் (16-ந்தேதி) காலை தூணில் ஏற்பட்டிருந்த விரிசல் மேலும் அதிகமானது. அத்துடன் அந்த தூண் அப்படியே ஆற்றுக்குள் இறங்கியபடியே இருந்தது. இதனால் உஷார் அடைந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகளின் உதவியுடன் பாலத்தின் மேல் பகுதியில் சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பிகளை துண்டிப்பு செய்தனர்.

இரும்பு பாலத்தின் தூணில் ஏற்பட்ட விரிசல் பற்றிய செய்தி அறிந்ததும் பொதுமக்கள், மற்றும் திருச்சி வழியாக வாகனங்களில் சென்ற பயணிகள் கொள்ளிடம் புதிய பாலத்தில் நின்று வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். 16-ந்தேதியில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அந்த தூண் கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றுக்குள் இறங்கி கொண்டே இருந்தது. நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் சுமார் 20 அடி உயரம் உள்ள அந்த தூண் முழுவதுமாக இறங்கி, ஆற்றில் நீர் பாய்ந்து செல்லும் மட்டத்திற்கு பாலத்தின் தரைப்பகுதி தொட்டில் போல் காணப்பட்டது.

மேலும் 18 -வது தூணின் அருகில் இருந்த 19-வது தூணிலும் விரிசல் ஏற்பட்டு அந்த தூணும் ஆற்றுக்குள் பாதி அளவு இறங்கியபடி இருந்தது. இதனால் இந்த 2 தூண்கள் உள்ள பகுதியில் பாலம் எந்த நேரத்திலும் இடிந்து ஆற்றுக்குள் விழும் அபாயம் ஏற்பட்டது. இந்த பாலம் இடிந்தாலும் அதனால் பொதுமக்களுக்கோ அல்லது அருகில் உள்ள புதிய பாலத்திற்கோ எந்த வித ஆபத்தும் இல்லை என திருச்சி மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி அறிவித்து இருந்தார். ஆனாலும் திருச்சி மாநகர மக்களை பாலம் தொடர்பான செய்திகள் மிரட்டிக்கொண்டே இருந்தன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 12.30 மணி அளவில் 18-வது தூண் முற்றிலுமாக ஆற்றுக்குள் இறங்கியது. இதனால் பாலத்தின் அந்த பகுதி அப்படியே இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. பாலத்தின் தரைப்பகுதி மற்றும் அதனுடன் இணைந்த எக்கு இரும்பு பாளங்கள் எல்லாம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இந்த தூண் இடிந்து விழுந்த சுமார் 1 மணி நேரம் கழித்து அதிகாலை 1.30 மணி அளவில் 19-வது தூணும் ஆற்றுக்குள் இறங்கியது. இதனால் அந்த பகுதியும் அடியோடு இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் சுமார் 800 மீட்டர் நீளம் உள்ள பாலத்தில் தற்போது 2 தூண்களுக்கு இடைப்பட்ட பகுதியான 200 அடி அகலத்திற்கு பிளவு ஏற்பட்டு அந்த வழியாக வெள்ள நீர் பாய்ந்து செல்கிறது. மேலும் பாலத்தின் 17 மற்றும் 20-வது தூண்களும் ஆற்றுக்குள் இறங்கிய படியே செல்வதால் அந்த பகுதிகளும் விரைவில் இடிந்து விழும் நிலை ஏற்பட்டு உள்ளது.

கொள்ளிடம் இரும்பு பாலம் இடிந்து விழுந்ததால் அதனை நேரில் பார்ப்பதற்காக நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள் புதிய பாலத்தில் வந்து குவிந்து வேடிக்கை பார்த்தனர். சிலர் இடிந்த பாலம் தெரியும் வகையில் நின்று கொண்டு ‘செல்பி’ எடுத்தனர். இந்த பாலத்தின் வழியாக கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற வெளியூர் பயணிகளும் இதற்கு விதி விலக்கு அல்ல. இதனால் அந்த பாலத்தில் நேற்று காலை முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாள் என்பதால் கொள்ளிடம் புதிய பாலம், வேடிக்கை பார்க்க வந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களின் கூட்டத்தால் சுற்றுலா தலம் போல் மாறியது. போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்களை நீண்ட நேரம் அங்கு நிற்கவிடாமல் ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் அறிவிப்புகளை வெளியிட்டனர்.

ஒரு வழியாக கடந்த சில நாட்களாக பொதுமக்களை மிரட்டி வந்த கொள்ளிடம் இரும்பு பாலம் தனது ஆயுளை முடித்துக்கொண்டது என்று தான் சொல்லவேண்டும். இடைப்பட்ட 90 ஆண்டுகளில் எத்தனையோ புயல், மழை, வெள்ளத்தை தாங்கி கொண்டு லட்சக்கணக்கான வாகனங்களை தனது முதுகில் சுமந்து சென்ற பாலம் இடிந்து விழுந்ததை பார்க்கும் மக்கள் மனதில் ஒரு வித சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story