அரியலூர் தாலுகா அலுவலகத்தில் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நாளை நடக்கிறது


அரியலூர் தாலுகா அலுவலகத்தில் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 20 Aug 2018 3:45 AM IST (Updated: 20 Aug 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

தமிழக முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் ஏழை, எளிய விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் ஏழை, எளிய விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு நிவாரணத்தொகை பெற்று பயனடையலாம்.

இப்பயன்களை பெற உழவர் அட்டை இல்லாத நபர்கள் இது தொடர்பாக நடைபெறும் முகாமில் மனு செய்து உழவர் அட்டைக்கு பதிந்து கொள்ளவும். உழவர் அட்டைக்கு ஏற்கனவே பதிந்த நபர்கள் மேற்குறிப்பிட்ட திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற்று பயன்பெறும் நோக்கத்தோடு அரியலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் வசிப்பவர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) அரியலூர் தாலுகா அலுவலகத்திலும், செந்துறை தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் வசிப்பவர்களுக்கு வருகிற 23-ந்தேதி செந்துறை தாலுகா அலுவலகத்திலும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story