திருச்சி லிங்க நகர், உத்தமர் சீலி பகுதியில் வடியாமல் நிற்கும் தண்ணீர் இரண்டாவது நாளாக மக்கள் அவதி


திருச்சி லிங்க நகர், உத்தமர் சீலி பகுதியில் வடியாமல் நிற்கும் தண்ணீர் இரண்டாவது நாளாக மக்கள் அவதி
x
தினத்தந்தி 20 Aug 2018 4:30 AM IST (Updated: 20 Aug 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி லிங்க நகர் மற்றும் உத்தமர் சீலி பகுதியில் தண்ணீர் வடியாமல் இருப்பதால் இரண்டாவது நாளாக மக்கள் அவதி அடைந்தனர்.

திருச்சி,

திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் வினாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீரும் நேற்று இரண்டாவது நாளாக திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக காவிரியின் கரையோர பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.

திருச்சி உறையூர் லிங்க நகர் கோரையாறு மற்றும் குடமுருட்டி ஆறுகள் காவிரி ஆற்றுடன் கலக்கும் இடத்தில் அமைந்து உள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் லிங்க நகரில் உள்ள வீடுகளையும், குழுமணி சாலையையும் தண்ணீர் சூழ்ந்தது. அறவானூர் பகுதியிலும் தண்ணீர் தேங்கி நின்றது. நேற்று இரண்டாவது நாளாக அந்த பகுதிகளில் தண்ணீர் வடியவில்லை. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதி அடைந்தனர்.

இதே போல் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் திருச்சி- கல்லணை சாலையில் உத்தமர் சீலி அருகே தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இந்த சாலையிலும் நேற்று இரண்டாவது நாளாக தண்ணீர் வடியவில்லை. இந்த சாலை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு இருந்தாலும் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் தண்ணீரில் இறங்கி பொழுது போக்கினார்கள். திருச்சி கும்பகோணத்தான் சாலை ஸ்ரீராம் நகரிலும் நேற்று இரண்டாவது நாளாக வாழைத்தோப்புகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

Next Story