எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுப்பு


எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 20 Aug 2018 4:30 AM IST (Updated: 20 Aug 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் திருச்சி ஜங்ஷனில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

பலத்த மழை, வெள்ளம், நிலச்சரிவால் கேரள மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீளா துயரில் அங்கு பொதுமக்கள் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிவாரண பொருட்கள், நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பலர் கேரள மாநில மக்களுக்காக நிவாரண பொருட்கள் சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் கேரள மாணவ-மாணவிகளும் நிவாரண பொருட்களை சேகரித்தனர். இதில், அரிசி, போர்வை, குழந்தைகளுக்கான உடைகள், உணவு பொருட்கள், நாப்கின், மருந்துகள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேகரித்து 105 அட்டைப்பெட்டிகளில் வைத்தனர். இதனை காரைக்கால்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருவாரூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு பார்சல் அலுவலகம் மூலம் நேற்று ஏற்றினர். நிவாரண பொருட்களை ரெயிலில் அனுப்ப இலவச வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதால் அந்த வசதியை மாணவர்கள் பயன்படுத்தினர்.

ரெயிலில் பார்சல் பெட்டியில் நிவாரண பொருட்கள் அனைத்தும் ஏற்றப்பட்டன. ரெயில் நேற்று இரவு 8 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு முதலாவது நடைமேடைக்கு வந்தது. அப்போது திருச்சி ரெயில்வே பார்சல் அலுவலக அதிகாரிகள், பார்சல் பெட்டியில் வந்த நிவாரண பொருட்களை இறக்க தொடங்கினர். அப்போது அங்கு வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த 3 மாணவர்கள், நிவாரண பொருட்களை இதே ரெயிலில் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும், அவற்றை குறிப்பிட்ட இடத்திற்கு தாங்களே நேரடியாக கொண்டு செல்ல இருப்பதாகவும் கூறினர். ஆனால் ரெயில்வே சேகரிப்பு மையம் மூலம் மட்டுமே நிவாரண பொருட்கள் மொத்தமாக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், தனிப்பட்ட முறையில் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நிவாரண பொருட்கள் அனைத்தும் நடைமேடையில் இறக்கி வைக்கப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ரெயில்வே ஊழியர்களிடம் மாணவர்கள் மன்றாடி கேட்டும், அவர்கள் அனுமதி மறுத்தனர். தாங்கள் சேகரித்து கொண்டு வந்த நிவாரண பொருட்கள் நடைமேடையில் கிடந்ததை கண்டு கேரள மாணவர்கள் தவித்தனர். இதற்கிடையில் ரெயில் இரவு 8.20 மணி அளவில் புறப்பட்டு சென்றது. பார்சல் பெட்டியில் எந்த பொருட்களும் இல்லாமல் காலியாக சென்றது குறிப்பிடத்தக்கது. ரெயில் சென்றபின் அடுத்தகட்டமாக நிவாரண பொருட்களை கொண்டு செல்ல ரெயில் நிலைய அதிகாரிகளிடமும், உயர் அதிகாரிகளிடமும் மாணவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கெஞ்சினர். அப்போது அடுத்த ரெயில் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் கூறினர். இதனால் ரெயில் நிலைய நடைமேடையில் நிவாரண பொருட்களின் அருகே கேரள மாணவர்கள் 3 பேரும் செய்வதறியாமல் அமர்ந்திருந்தனர்.

எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று பாலக்காடு வரை இயக்கப்பட்டது. வெள்ளம் காரணமாக பாலக்காடு-எர்ணாகுளம் இடையே பகுதிதூரம் ரத்து செய்யப்பட்டிருந்தது. அந்த ரெயிலில் நிவாரண பொருட்களை மாணவர்கள் நேற்று இரவு கொண்டு சென்றிருந்தால் இன்று (திங்கட்கிழமை) காலை பாலக்காடு சென்றடைந்திருக்கும். அங்கிருந்து நிவாரண பொருட்கள் வேறு வழியில் வினியோகிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் ரெயிலில் அனுமதி மறுக்கப்பட்டதால் நிவாரண பொருட்கள் மக்களுக்கு கிடைப்பது தாமதமாவதை எண்ணி சக பயணிகள், சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்தனர். நிவாரண பொருட்களை அனைத்து ரெயில்களிலும் கொண்டு செல்ல அனுமதித்தால், அவை உரிய நேரத்தில் மக்களுக்கு சென்றடையும். பிறர் ரெயிலில் கொண்டு செல்வதை வாங்கி, மொத்தமாக ரெயில்வே நிர்வாகம் அனுப்பும் முடிவை மாற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் மாணவர்கள் கொண்டு வந்த நிவாரண பொருட்களை இன்று ரெயில் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என ரெயில்வே வட்டாரத்தில் தெரிவித்தனர். 

Next Story