கேரள மாநில மழை நிவாரணத்துக்கு ‘அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒருமாத சம்பளத்தை வழங்குவார்கள்’ - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


கேரள மாநில மழை நிவாரணத்துக்கு ‘அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒருமாத சம்பளத்தை வழங்குவார்கள்’ - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Aug 2018 11:15 PM GMT (Updated: 19 Aug 2018 9:08 PM GMT)

கேரள மாநில மழை வெள்ள நிவாரணத்துக்கு தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை,

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின்னர் சென்னை திரும்புவதற்காக நேற்று மாலை 4.30 மணியளவில் கோவை விமான நிலையம் சென்ற முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:–

கோவை மாவட்டம் வால்பாறையில் ஏற்பட்டுள்ள மழை சேதங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து உள்ளனர்.

வால்பாறைக்கு செல்லும் சாலையில் 63 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதை சீர் செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அவற்றிற்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

கேரளாவுக்கு கடந்த 10–ந் தேதி 5 கோடி ரூபாயும், மேலும் 5 கோடி ரூபாயும் நிவாரண நிதியாக அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களும் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியால் 21 லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. கேரளாவுக்கு அரசின் சார்பிலும் பொதுமக்களிடம் இருந்தும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அனைத்து தரப்பு மக்களும் அவரவர் சக்திக்கு ஏற்றவாறு நிவாரண நிதி வழங்க வேண்டும்.

முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர், அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களின் ஒருமாத சம்பளத்தை கேரள மாநில நிவாரண நிதிக்கு அளிப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story