திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் - அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார் பேச்சு
திருப்பரங்குன்றத்தில் எதிர்கட்சிகளை டெபாசிட் இழக்க செய்து, 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத் தில் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெறச்செய்வோம் என்று அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார் பேசினர்.
மதுரை,
மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பரங்குன்றத்தில் நடந்தது. புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிவபதி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:–
திருப்பரங்குன்றத்தில் இளைஞர்களின் திருவிழா போல், மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி சார்பாக இந்த விழா மாநாடு போல் நடைபெற்று கொண்டு இருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் அது வெற்றியில் தான் முடியும். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் எதிர்கட்சிகளை டெபாசிட் இழக்க செய்து 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
கருணாநிதி இறுதிச்சடங்கில் முதல்–அமைச்சர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று ரஜினிகாந்த் கேட்கிறார். கருணாநிதி மறைந்தவுடன் அதிகாலையில் அரசின் சார்பில் முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடலுக்கு மரியாதை செலுத்தினர். இது ரஜினிகாந்துக்கு தெரியாதா?. ஜெயலலிதா இறுதி சடங்கில் ஸ்டாலின் கலந்து கொண்டாரா?. இவ்வளவு ஆதங்கத்துடன் பேசும் ரஜினிகாந்த் ஏன் கருணாநிதி இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும் போது கூறியதாவது:–
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது. அவர் கருணாநிதியை ஒரு உத்தமர் போல் கூறி வருகிறார். கருணாநிதி பல கட்சிகளை உடைத்தவர். காங்கிரசை உடைத்து த.மா.கா.வை ஆரம்பிக்க செய்தார். பின்னர் அதில் இருந்து சிதம்பரம் காங்கிரசை உருவாக்கினார். பார்வர்டு பிளாக்–கம்யூனிஸ்டு கட்சிகளை பல கூறுகளாக உடைத்தார். இதற்கெல்லாம் மேலாக தன் பிள்ளைகளான அழகிரியையும், ஸ்டாலினையும், பிரித்து அதன் மூலம் அரசியல் செய்தார். இதையெல்லாம் ரஜினி நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த 17 மாதத்தில் எண்ணற்ற சாதனைகளை முதல்–அமைச்சர் படைத்து உள்ளார். அதையெல்லாம் மக்கள் உன்னிப்பாக பார்த்து வருகின்றனர். ஒரு சிறந்த ஆட்சியை நடத்தி வருவதால் தான் கேரளா, கர்நாடகா எல்லையோரத்தில் கடும் இயற்கை சீற்றங்கள் நடந்து வந்த போதிலும் எடப்பாடி பழனிசாமியின் புனித அரசைக்கண்டு அஞ்சி இயற்கை சீற்றமே தமிழகம் வர அச்சம் கொண்டுள்ளது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தேடித்தர அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:–
இங்கு சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றிய ஏ.கே.போஸ் மறைந்து விட்டார். ஒரு பக்கம் துக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் நாம் துக்கத்துடன் இருப்பதை கண்டு எதிரிகள் பல்வேறு சூழ்ச்சிகளை கையாளக்கூடும். அதை தகர்த்தெறியும் வகையில் திருப்பரங்குன்றம் தொகுதி இன்றைக்கும், என்றைக்கும் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் மாபெரும் நிகழ்ச்சியை இங்கு நடத்தியுள்ளோம். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றி உறுதி. மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், சீனிவேல் ஆகியோர் படத்தை திறந்து வைத்து அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மதுரைக்கு வர உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசும் போது, ‘‘திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நம்மை வெல்ல யாராலும் முடியாது. இந்த படை தோற்கின் எப்படை வெல்லும்., ஈட்டியை எறிந்தாலும் மார்பு காட்டும் இந்த இளைஞர் படை தான் எம்.ஜி.ஆரின் இளைஞரணி ஆகும். கட்சியின் பல வெற்றிகளுக்கு இளைஞரணியின் பங்கு அளப்பரியது. எம்.ஜி.ஆர். படம் பக்கத்தில் கருணாநிதி படத்தை வைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறுகிறார். காந்தி படத்தின் அருகில் கோட்சே படத்தை வைக்க முடியுமா?. ஜெயலலிதா மறைவிற்கு லட்சக்கணக்கான தாய்மார்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். ஆனால் கருணாநிதிக்கு மறைவுக்கு அவர்களது குடும்பத்தினர் மட்டும் தான் அழுதார்கள்‘‘ என்றார்.