இளம்பெண் தூக்குப்போட்டு சாவு; காதலன் தற்கொலை முயற்சி


இளம்பெண் தூக்குப்போட்டு சாவு; காதலன் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 19 Aug 2018 10:07 PM GMT (Updated: 19 Aug 2018 10:07 PM GMT)

ஆரணியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால், காதலனும் தற்கொலைக்கு முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி, 


ஆரணி ராட்டினமங்கலம் இ.பி.நகரை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு விமல்ராஜ் என்ற மகனும், சவுமியா (வயது 17) என்ற மகளும் உள்ளனர். விநாயகமூர்த்தி இறந்து விட்டார். இதனால் தாய் ரேணுகாவின் அரவணைப்பில் விமல்ராஜிம், சவுமியாவும் இருந்தனர். விமல்ராஜ் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். சவுமியா 10-ம் வகுப்பு முடித்து விட்டு கடந்த 3 ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரேணுகா வெளியே சென்றார். வீட்டில் தனியாக இருந்த சவுமியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த ரேணுகா மகள் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடலை வீட்டில் வைத்து இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சவுமியாவின் தந்தை வழி பாட்டி கவுரி மற்றும் உறவினர்கள் ஆரணி பெரிய சாயக்கார தெருவில் வசிக்கின்றனர்.

அவர்களுக்கு, நேற்றிரவு சவுமியா இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த பாட்டி மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து சவுமியாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். எதற்காக, தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான தகவல் சரியாக தெரியாததால் கவுரி சந்தேகமடைந்தார். இதையடுத்து, பேத்தியின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உறவினர்கள் சிலருடன் சென்று கவுரி புகார் அளித்தார்.

போலீசார் புகார் மனுவை பெறாமல் இழுத்தடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கவுரி நேற்று காலை உறவினர்களுடன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தார். பின்னர், போலீசார் புகார் மனுவை பெற்றுக் கொண்டு, வீட்டுக்கு சென்று சவுமியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, நேற்றிரவு சவுமியாவின் மாமனும், காதலனுமான நெசல் கிராமத்தை சேர்ந்த ரகுராமன் (20) என்பவர் சவுமியா தூக்கில் தொங்கிய அதே இடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார். அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சவுமியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன?, காதலன் தற்கொலைக்கு முயன்றது ஏன்? சவுமியாவின் தாய் போலீசில் தகவலை மறைத்தது ஏன்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story