இந்து முன்னணியினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்


இந்து முன்னணியினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
x
தினத்தந்தி 20 Aug 2018 3:55 AM IST (Updated: 20 Aug 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

கோவில் சொத்துக்களை பாதுகாக்கக் கோரி இந்து முன்னணியினர் மோட்டார்சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இதனை டைரக்டர் கஸ்தூரி ராஜா தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை,


கோவில் சொத்துக்களை பாதுகாக்கவும், கோவில்களில் நடக்கும் திருட்டை தடுக்கவும் இந்து முன்னணி சார்பில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. வேலூர் கோட்டத் தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். வேலூர் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ், கோட்ட செயலாளர் ரகுநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் சங்கர் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சினிமா டைரக்டர் கஸ்தூரிராஜா கலந்து கொண்டு கொடியசைத்து மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலம் திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் தொடங்கி புதிய பஸ் நிலையம், பெரியார் சிலை வழியாக அருணாசலேஸ்வரர் கோவிலை வந்து அடைந்தது. பின்னர் கோவில் முன்பு அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங் கள் எழுப்பினர்.

இதையடுத்து இந்து முன்னணியினர் கோவிலுக்குள் சென்று அருணாசலேஸ்வரர் சாமி சன்னதியின் முன்பு உள்ள தங்க கொடிமரத்தின் அருகில் உள்ள உண்டியலில் கோரிக்கைகளை வலியுறுத்தி எழுதப்பட்டு இருந்த கடிதங்களை உண்டியலில் செலுத்தினர். மேலும் இந்து முன்னணியினர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கோரிக்கை கடிதங்களை வழங்கினர். அவர்களும் கோரிக்கை கடிதங்களை உண்டியலில் செலுத்தினர்.

வேலூர் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் கூறுகையில், ‘தமிழகத்தில் 38 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் இருந்து 7 ஆயிரம் சிலைகள் கடத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 1,700 சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கண்டுபிடித்து உள்ளார். எனவே, அவரையே மீண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக போட வேண்டும். மேலும் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். ஆக்கிரமித்துள்ள நிலங்களை உடனே மீட்க வேண்டும். கோவில்களை நிர்வகிக்க சான்றோர்களை வைத்து தனிவாரியம் அமைக்க வேண்டும்’ என்றார்.


Next Story