சிவகிரியில் கத்திக்குத்தில் காயம் அடைந்த ஆட்டோ டிரைவர் சாவு


சிவகிரியில் கத்திக்குத்தில் காயம் அடைந்த ஆட்டோ டிரைவர் சாவு
x
தினத்தந்தி 20 Aug 2018 4:00 AM IST (Updated: 20 Aug 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் கத்திக்குத்தில் காயம் அடைந்த ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.

சிவகிரி,

நெல்லை மாவட்டம் சிவகிரி சந்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கம் மகன் ராமசுப்பு (வயது 35), ஆட்டோ டிரைவர். அதே பகுதி 1–ம் திருநாள் மண்டகப்படி தெருவை சேர்ந்தவர் குருசாமி மகன் பொன்மாரி (30). இவர் சிவகிரி பஸ்நிலையத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் செயலாளராக உள்ளார்.

சிவகிரி பஸ்நிலையத்தின் உள்ளே இரவு 11 மணிக்கு மேல் யாரும் ஆட்டோவை ஓட்டி வரக்கூடாது என சங்கத்தில் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த 14–ந் தேதி இரவு 11 மணிக்கு மேல் ராமசுப்பு ஆட்டோவை பஸ்நிலையத்தின் உள்ளே ஓட்டி வந்துள்ளார். இதனை அறிந்த சங்க நிர்வாகி பொன்மாரி, ராமசுப்புவிடம் சத்தம் போட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த பொன்மாரி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமசுப்புவை குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த அவர், சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு ராமசுப்பு இறந்தார். இதுதொடர்பாக சிவகிரி போலீசில் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, பொன்மாரியை கைது செய்தார்.


Next Story