மழைநீர் கால்வாய் பணிக்காக உள்வட்ட சாலையில் தோண்டிய பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்


மழைநீர் கால்வாய் பணிக்காக உள்வட்ட சாலையில் தோண்டிய பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 19 Aug 2018 11:31 PM GMT (Updated: 19 Aug 2018 11:31 PM GMT)

ஆதம்பாக்கத்தில், மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக உள்வட்ட சாலையில் தோண்டிய பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலந்தூர், நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம் உள்பட மழைக்காலங்களில் கடுமையாக பாதிக்கப்படும் பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆலந்தூரில் இருந்து வேளச்சேரி வரை அமைக்கப்பட்ட உள்வட்ட சாலையால் மழைக்காலங்களில் ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகர் 27 மற்றும் 28 ஆகிய தெருக்களில் மழைநீர் தேங்கி இருக்கும். இதனால் வீடுகளைவிட்டு அப்பகுதி மக்கள் வெளியேறும் நிலை ஏற்படும்.

எனவே தில்லைகங்கா நகர் 27 மற்றும் 28 ஆகிய தெருக்களில் இருந்து மழைநீர் முழுவதும் ஆதம்பாக்கம் ஏரிக்கு வெளியேறும் வகையில் உள்வட்ட சாலையின் குறுக்கே ரூ.40 லட்சத்தில் மழைநீர் கால்வாய் அமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கினர்.

மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக தில்லைகங்கா நகர் 27-வது தெருவில் இருந்து உள்வட்ட சாலையின் ஒருபகுதியில் தடுப்புகள் அமைத்து பள்ளம் தோண்டப்பட்டது.

ஆனால் இந்த பணிகள் மந்த கதியில் நடப்பதாகவும், சாலையின் பாதி அளவுக்கு பள்ளம் தோண்டியதுடன் நிற்பதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அந்த பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து ஆலந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது சாலையின் ஒருபுறம் பாதி அளவுக்கு பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் போக்குவரத்தை மாற்றி அமைத்தால் மீதம் உள்ள பகுதியில் பள்ளம் தோண்டி விரைவாக மழைநீர் கால்வாய் அமைக்கலாம். ஆனால் சாலையின் ஒரு பகுதியில் முதலில் மழைநீர் கால்வாய் அமைத்து முடித்த பிறகு அந்த பகுதியில் போக்குவரத்தை மாற்றி விட்டு மறுபகுதியில் பணிகளை மேற்கொள்ளலாம் என போக்குவரத்து போலீசார் கூறுவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

அப்போது அங்கு வந்த பொதுமக்கள், மழைக்காலம் தொடங்கும் முன்பு மழைநீர் கால்வாய் பணிகளை முடிக்க வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

அப்போது அவருடன் முன்னாள் கவுன்சிலர்கள் என்.சந்திரன், பி.குணா, ப.முத்து, கே.ஆர்.ஜெகதீசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Next Story