ரெயில் மோதி பெண்ணின் கால்கள் துண்டாகின


ரெயில் மோதி பெண்ணின் கால்கள் துண்டாகின
x
தினத்தந்தி 19 Aug 2018 11:49 PM GMT (Updated: 19 Aug 2018 11:49 PM GMT)

கயத்தாறு அருகே ரெயில் மோதியதில் பெண்ணின் கால்கள் துண்டாகின.

கயத்தாறு, 


தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பரும்புகோட்டை காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 37) விவசாயி. இவருடைய மனைவி அந்தோணியம்மாள் (32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். விஜயகுமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டாம். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த அந்தோணியம்மாள் தற்கொலை செய்ய முடிவு செய்து, தனது வீட்டுக்கு அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்துக்கு சென்றார்.

அப்போது தூத்துக்குடியில் இருந்து ஈரோடுக்கு சென்ற ரெயில் மோதி அந்தோணியம்மாளின் 2 கால்களும் துண்டாகின. இருந்தபோதிலும், உயிரை மாய்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் மீண்டும் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் அந்தோணியம்மாளை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story