அமெரிக்க பெண் டாக்டரை கரம் பிடித்த ஊத்தங்கரை என்ஜினீயர் தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது


அமெரிக்க பெண் டாக்டரை கரம் பிடித்த ஊத்தங்கரை என்ஜினீயர் தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது
x
தினத்தந்தி 21 Aug 2018 4:30 AM IST (Updated: 21 Aug 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க பெண் டாக்டரை ஊத்தங்கரை என்ஜினீயர் கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் தமிழ் முறைப்படி அரூரில் நடைபெற்றது.

அரூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பாவக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவர் சென்னை அண்ணா பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் ஆவார். இவருடைய மனைவி ரேணுகாதேவி. இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களுடைய மகன் திருநாவுக்கரசு. இவர் அமெரிக்காவில் கடந்த 6 ஆண்டுகளாக சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். அமெரிக்க டாக்டர் கல்லகர் மகள் எலிசபெத். இவரும் டாக்டர் ஆவார். எலிசபெத்தும், திருநாவுக்கரசும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்தநிலையில் எலிசபெத் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் தமிழ் முறைப்படி திருமணம் செய்ய விரும்பினர். இதையடுத்து முறைப்படி விசா பெற்று எலிசபெத் குடும்பத்துடன் தமிழகம் வந்தார். எலிசபெத், திருநாவுக்கரசு திருமணம் அரூரில் ஊத்தங்கரை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக மணமகளின் பெற்றோர், உறவினர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் திருமண மண்டபத்திற்கு வந்தனர்.

இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட எலிசபெத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் தமிழ் பாரம்பரிய முறைப்படி ஆண்கள் பட்டு வேட்டி, சட்டையும், பெண்கள் பட்டுபுடவை, நெற்றியில் குங்குமம், தலையில் மல்லிகை பூ வைத்து கலந்து கொண்டனர். பட்டு புடவை அணிந்து மணமேடையில் வந்து அமர்ந்த மணப்பெண் எலிசபெத்தின் கழுத்தில் தமிழ் முறைப்படி திருநாவுக்கரசு தாலி கட்டினார்.

இதையடுத்து மணமக்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இந்த ருசிகர திருமண விழாவில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதில் கலந்து கொண்ட உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மல்லிகைப்பூ செடி தாம்பூலமாக வழங்கப்பட்டது.

Next Story