மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 21 Aug 2018 4:15 AM IST (Updated: 21 Aug 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார் இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 327 மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

வாரியங்காவல் வடக்கு காலனி பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், வாரியங்காவல் வடக்கு காலனி தெருவில் 1 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியம் உள்ளது. ஆனால் மின்மோட்டார் கடந்த 6 மாதத்துக்கு முன்பு பழுதாகி போனது. அதனால் மேல்நிலை நீர்தேக்க தோட்டிக்கு நீர் ஏற்றி முடியாமல் உள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இதனால் பொதுமக்கள் அன்றாட குடிப்பதற்கு மற்றும் தங்களது அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுநாள் வரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களது குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அணைக்குடி கிராம மக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். அதில், ஸ்ரீபுரந்தான் ஊராட்சியை சேர்ந்தது அணைக்குடி கிராமம். தற்பொது கொள்ளிடம் மற்றும் காவிரி வெள்ளத்தால், எங்கள் கிராமத்தில் கொள்ளிடம் நீர் புகுந்தது. இதனால் நாங்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேறி 4 நாட்களாக பாதுகாப்பு முகாமில் தங்க வேண்டிய நிலை உள்ளது. ஊரின் உள்ளே வன விலங்குகளான காட்டு பன்றி, குரங்கு, பாம்பு, முதலைகள் உள்ளிட்டவைகள் ஆக்கிரமித்து, பொருட்கள் அனைத்து சேதப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் பல இன்னல்களுக்கு கிராம மக்கள் அனைவரும் ஆளாகி வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர், பொதுமக்களின் நலன் கருதி, பஸ் நிறுத்தம் அருகே சுமார் 6 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் அணைக்குடி கிராம மக்களை புதிதாக குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்

பின்னர் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலருக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் பூங்கோதை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story