காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
குறைதீர்க்கும் கூட்டத்தின்போது, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதில் அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களும் கலந்துகொண்டனர். இந்தநிலையில் திண்டுக்கல் அருகே உள்ள பெரியக்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பாலன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
இதையடுத்து அவர்கள் திடீரென காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை, அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு சிலரை மட்டும் மனு அளிக்க அனுமதித்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் வேலுவிடம் மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2 ஆண்டுகளாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது கடுமையாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள 4 ஆழ்துளை கிணறுகளில் ஓரளவு தண்ணீர் உள்ளது.
அவற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக பொருத்தப்பட்டுள்ள குழாய், ஆழ்துளை கிணற்றின் பாதி தூரத்துக்கு மட்டுமே உள்ளது. மேலும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், எங்கள் பகுதி வழியாக தான் குழாய் பதிக்கப்பட்டு திண்டுக்கல் நகருக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. அதில் இருந்து இணைப்பு கொடுத்து மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீரை ஏற்றி குடிநீர் வினியோகம் செய்யலாம். எனவே எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வினியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
இதேபோல், நிலக்கோட்டை அருகே உள்ள அப்பாவுபிள்ளைபட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு என்று சுடுகாடு கிடையாது. இதனால் யாராவது இறந்தால் ஊர் அருகே செல்லும் ஓடையின் கரையில் தான் புதைத்து வருகிறோம். குறைவான இடமே உள்ளதால் ஏற்கனவே புதைக்கப்பட்ட இடத்தில், மற்றொருவரின் உடலை புதைக்கும் நிலை உள்ளது. ஓடையில் தண்ணீர் வந்தால் புதைக்கப்பட்ட உடல்கள் நீரில் அடித்து செல்லப்படுகின்றன. இதனால் எங்கள் பகுதிக்கு சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்கித்தர வேண்டும், என்று கூறியிருந்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி பிறந்தநாள், ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை தாசில்தார் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story