மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டுத்தரக்கோரி மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்கள்


மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டுத்தரக்கோரி மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்கள்
x
தினத்தந்தி 21 Aug 2018 4:15 AM IST (Updated: 21 Aug 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டுத்தரக்கோரி திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு பெண்கள் மண்எண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை காளியங்கராயன் தெருவை சேர்ந்தவர் ஞானஜோதி. இவருடைய மனைவி சுஜாதா (வயது50) மற்றும் 2 பெண்கள் கையில் மண்எண்ணெய் கேனுடன் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளிக்க வந்தனர்.

இதை பார்த்த போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பெண்களிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சுஜாதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியை சேர்ந்த ஒருவர், தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாக என்னிடம் கூறினார்.

மேலும் அந்த நிறுவனத்துக்கு வேறு தொண்டு நிறுவனத்தில் இருந்து பல கோடி ரூபாய் வருவதாகவும், அதனை பெறவேண்டுமானால் பணம் வேண்டும் என கேட்டார். பணம் வந்தவுடன் கொடுத்த பணத்துடன் சேர்த்து லாபத்தில் பங்கு தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

இதனை நம்பி என்னிடம் இருந்த ரூ.17 லட்சத்தை கொடுத்தேன். ஆனால் அந்த தொகையை திரும்ப தராமல் மோசடி செய்து விட்டார். இதுகுறித்து நன்னிலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் மோசடி செய்த நபர், அடியாட்களை கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். பணத்தை இழந்த மனவேதனையில் மண்எண்ணெய் கேனுடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தேன். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். என்னுடைய பணம் திரும்பி கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டுத்தரக்கோரி பெண்கள், மண்எண்ணெய் கேனுடன் வந்ததால் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story