வாய்க்கால்களை முறையாக தூர்வாரி நீர்நிலைகளில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


வாய்க்கால்களை முறையாக தூர்வாரி நீர்நிலைகளில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Aug 2018 10:45 PM GMT (Updated: 20 Aug 2018 9:13 PM GMT)

வாய்க்கால்களை முறையாக தூர்வாரி நீர் நிலைகளில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் திருவாரூர்் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவாரூர்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமையில் நிர்வாகிகள், நேற்று மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநிலத்தில்் பருவ மழை அளவுக்கு அதிகமாக பெய்து வருகிறது. அதனால் அங்கிருந்து தமிழகத்திற்கு அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது.

இதனால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள குளங்கள், ஏரிகள், நீர்தேக்க குட்டைகள் ஆகியவை தண்ணீர் சென்று அடையாமல் வறண்டு கிடக்கின்றன. ஆறுகளில் தண்ணீர் வந்தும் இதுவரை சாகுபடிக்கு பலனளிக்காமல் இருந்து வருகிறது. எதிர் வரும் சம்பா சாகுபடிக்கு தேவையான நீரை சேமிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதற்கு திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாருவதற்கு அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை சரிவர பயன்படுத்தப்படவில்லை என்பது தான் காரணம் ஆகும்.

பொதுப்பணித்துறை எந்தவித வாய்க்கால்களையும் தூர்வாராமல், ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். பணிகள் முடித்து விட்டதாக கூறி பணத்தை பெறும் முயற்சி நடைபெற்று வருகிறது. தேவைக்கு அதிகமான நீர் இருந்தும் குறுவை, சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இனி வரும் பருவ மழையை கருத்தில் கொண்டு வாய்க்கால் களை முறையாக தூர்வாரி குளம், குட்டை நீர்நிலைகளில் தண்ணீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தூர்வாரும் பணிகளில் நடைபெற்ற முறைகேடுகளை முறையாக விசாரணை நடத்தி உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறைகேடுகள் குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story