ரே‌ஷன் கடைகளில் ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் மாமூல் வசூலிக்க கூடாது, 7 மாவட்ட ஊழியர்கள் கலெக்டரிடம் மனு


ரே‌ஷன் கடைகளில் ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் மாமூல் வசூலிக்க கூடாது, 7 மாவட்ட ஊழியர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 21 Aug 2018 4:30 AM IST (Updated: 21 Aug 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

ரே‌ஷன் கடைகளில் ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் மாமூல் வசூலிக்கக் கூடாது என்று 7 மாவட்ட ஊழியர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மதுரை,

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் தென் மண்டலம் சார்பில், ரே‌ஷன் கடை விற்பனையாளர்களின் ஊதிய உயர்வு உள்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இருந்து காந்தி மியூசியம் வரை மிகப்பெரிய பேரணியாக வந்தனர். மாநில பொதுச்செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். தென்மண்டல தலைவர் பாண்டியன், செயலாளர் ஆசிரிய தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் கலெக்டர் வீரராகவராவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

ரே‌ஷன் கடை விற்பனையாளர்களுக்கு மாதம் தோறும் அரசே நியாயமான ஊதியத்தை வழங்க வேண்டும். அனைவருக்கும் ஓய்வூதியம் தரவேண்டும். ரே‌ஷன் கடையில் ஆய்வு என்ற பெயரில் பல துறை அதிகாரிகள் மாமூல் பெறுவது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

கட்டுனர் இல்லாத ரே‌ஷன் கடைகளில் பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.1.500 வழங்க வேண்டும். நுகர்பொருள் வாணிப கழகத்தால் வழங்கப்படும் குடிமை பொருட்கள் தரமாகவும், சரியான எடையிலும் இருக்க வேண்டும். கட்டுப்பாடற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது. விற்பனையாளர்கள், கட்டுனர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். பதவி உயர்வு வழங்கப்படாத இடங்களில் 5 ஆண்டுகளுக்கு ஒரு சிறப்பு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மேற்கண்ட இந்த கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வருகிற செப்டம்பர் மாதத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story