பொக்காபுரம், வாழைத்தோட்டம் பகுதி மக்களை பாதுகாக்க வேண்டும் கலெக்டரிடம் மனு
பொக்காபுரம், வாழைத்தோட்டம் பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் மனு அளிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். அதன்படி பொக்காபுரம், வாழைத்தோட்டம், சீகூர் பகுதிகளை சேர்ந்த பழங்குடியினர் மற்றும் சிறு, குறு விவசாயிகள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–
கடந்த காலத்தில் அறிவியல் ரீதியாக சீகூர் பள்ளத்தாக்கு பகுதியில் யானை வழித்தடம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து ஒருங்கிணைந்த யானை வழித்தடம் என்ற பெயரில் கஜா ஆய்வறிக்கை மத்திய, மாநில அரசுகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. அதில் 4 யானை வழித்தடங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையில் யானை வழித்தடத்தில் மக்கள் வாழும் குடியிருப்புகள் வருவது இல்லை. ஆனால் தற்போது மாவட்ட கலெக்டரிடம் அந்த பகுதியில் பெருவாரியான கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும், இந்த கட்டிடங்கள் எப்போது கட்டப்பட்டது, எதற்காக கட்டப்பட்டது என்று சுப்ரீம் கோர்ட்டு விவரம் கேட்டது.
கஜா அறிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய கோரப்பட்டது. அந்த அறிக்கையில் கட்டிடங்களின் விவரம் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் கட்டிடங்களின் விவரத்தை மட்டும் குறிப்பிட்டு உள்ளதாலும், அரசு நிலத்தில் முறையான ஆவணம் இல்லாமல் வீடுகள் கட்டியதுபோல் குறிப்பிடப்பட்டு உள்ளதாலும் அப்பகுதியில் வசித்து வரும் பலர் வெளியேற்றப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. பழங்குடியினர் வனபாதுகாப்பு சட்டத்தின்படி இந்த பகுதியில் வாழும் ஆதிவாசிகள் குறித்த விவரங்கள் சுப்ரீம் கோர்ட்டில் அரசு மூலம் தெரிவிக்கவில்லை. கடந்த 1991–ம் ஆண்டுக்கு முன்பு ஊராட்சிகளின் உறுப்பினர்கள் கூட்டம் அமைவதற்கு முன்பாக குடியிருப்பு வரைபடம், ஊராட்சி அனுமதி போன்றவை இல்லாததால் அப்பகுதி மக்கள் சிறிய குடிசைகள், வீடுகளை கட்டி உள்ளதுடன், அதற்கான சொத்து வரி, வீட்டு வரி செலுத்தி உள்ளனர்.
இதுகுறித்த விவரங்களை அரசு தெரிவிக்காத காரணத்தால் 390 வீடுகளை இழந்து வெளியேற வேண்டிய நிலை வரும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்து உள்ளது. எங்களது மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ள விவரங்களை முழுமையாக மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை செயலாளர் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள மக்கள் தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். எனவே ஆதிவாசி மக்கள் மற்றும் அப்பகுதி மக்களை வெளியேற்றாமல் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து உதவும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனுவின் நகல் வருவாய்த்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
சிவசேனா கட்சியின் நீலகிரி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஊட்டியில் சிவசேனா கட்சி சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த ஊர்வலம் சேரிங்கிராஸ், மெயின் பஜார், லோயர் பஜார், மார்க்கெட், ஏ.டி.சி. வழியாக செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
தும்மனட்டி அருகே பட்டர்கம்பை எம்.ஜி.ஆர். காலனி பகுதி பொதுமக்கள் பாதை ஏற்படுத்தி தரக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில், எம்.ஜி.ஆர். காலனி பகுதியில் 30–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாங்கள் வீடுகளுக்கு செல்ல தேயிலை தோட்டத்தின் வழியாக சென்று வந்தோம். தற்போது அங்கு தனியார் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளதுடன், தடுப்புச்சுவர் மற்றும் இரும்பு கம்பிகள் கொண்டு அந்த பாதை அடைத்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 157 மனுக்கள் பெறப்பட்டன.