மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தர்ணா போராட்டம்


மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2018 3:30 AM IST (Updated: 21 Aug 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று காலை கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் அலுவலகம் முன்பு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளரும், மாவட்ட தலைவருமான டாக்டர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் டாக்டர் ஜெய்சிங் முன்னிலை வகித்தார். தர்ணா போராட்டத்தில் டாக்டர்கள் குமார் நடராஜன், மதன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் கூறியதாவது:–

அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்களுக்கு மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுவரை அதற்கு எந்த பதிலும் வரவில்லை. இதை கண்டித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மாநில அளவில் தர்ணா போராட்டம் நடத்தினோம். மேலும் இதுதொடர்பாக வருகிற 24–ந் தேதி பேரணியாக சென்று மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

இதனை தொடர்ந்து 27–ந் தேதி வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல் ஒத்துழையாமை இயக்கம் நடத்த உள்ளோம். இதற்கும் அரசு செவிசாய்க்க வில்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும் ஒன்று திரண்டு சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story