கிருஷ்ணகிரியில் அரசு டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் அரசு டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2018 4:15 AM IST (Updated: 21 Aug 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி, கிருஷ்ணகிரியில் அரசு டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை எதிரில் அரசு டாக்டர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு கிருஷ்ணகிரி அனைத்து மருத்துவர் சங்க கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த டாக்டர் ராமநாதன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் கைலாஷ், சதீஷ், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக, தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு டாக்டர்களுக்கும் ஊதியம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது டாக்டர்கள் பேசியதாவது:- தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் அனைத்து அரசு மருத்துவர்களுக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவ சங்கங்களும் இணைந்து அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை உருவாக்கியுள்ளது.

இந்த குழுவின் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் கடந்த மாதம் திண்டுக்கல்லில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்த கோரிக்கையை வலியுறுத்தி தற்போது தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் பல்வேறு கட்ட தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக கடந்த 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை 3 நாட்களுக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா, தாலுகா அல்லாத மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் இ.எஸ்.ஐ.யில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும் கோரிக்கை அட்டையினை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக வருகிற 24-ந் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து வருகிற 27-ந் தேதி முதல் வட்டார, மாவட்ட, மாநில அளவிலான அனைத்து விதமான திறனாய்வு கூட்டங்களையும் புறக்கணிப்பது, வகுப்புகளை புறக்கணிப்பது, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் கையொப்பமிடாமல் நிறுத்தி வைப்பது, எம்.சி.ஐ. மேற்பார்வைகளை புறக்கணிப்பது, முதலமைச்சர் காப்பீடு திட்ட பணிகள் உள்ளிட்ட அனைத்து சிறப்பு திட்டங்களுக்கான நிர்வாக பணிகளை புறக்கணிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவை எதற்கும் அரசு செவிசாய்க்காத பட்சத்தில், அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந் தேதி தலைமை செயலகம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளவும், செப்டம்பர் 21-ந் தேதியன்று மாநிலம் முழுவதும் அனைத்து மருத்துவர்களும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும் செயற்குழு முடிவெடுத்துள்ளது.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள். 

Next Story