கேரள மாநிலத்துக்கு ரூ.1½ கோடி மதிப்பில் நிவாரண பொருட்கள் - 8 லாரிகள் மூலம் அனுப்பிவைப்பு


கேரள மாநிலத்துக்கு ரூ.1½ கோடி மதிப்பில் நிவாரண பொருட்கள் - 8 லாரிகள் மூலம் அனுப்பிவைப்பு
x
தினத்தந்தி 21 Aug 2018 5:10 AM IST (Updated: 21 Aug 2018 5:10 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் இருந்து கேரள மாநிலத்துக்கு ரூ.1 கோடியே 69 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை 8 லாரிகள் மூலம் கலெக்டர் ராமன் அனுப்பி வைத்தார்.

வேலூர்,

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா மாநிலம் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசிய நிவாரண பொருட்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, உணவு பாதுகாப்புத்துறை, பொதுசுகாதார துறை மற்றும் பிற துறைகளின் மூலமாகவும், பொதுமக்கள், நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் மூலமாகவும் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட பொருட்களை பிரித்து கேரள மாநிலத்தின் தேவைக்கேற்ப எர்ணாகுளம், வயநாடு, மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு முதல்கட்டமாக ரூ.1 கோடியே 69 லட்சம் மதிப்பில் 8 லாரிகள் மூலம் நேற்று மாவட்ட கலெக்டர் ராமன் அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ஜேக்கப், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது கலெக்டர் ராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், மழையால் பாதிக்கப்பட்ட கேரளமக்களுக்கு, தமிழக அரசின் ஆதரவு இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைசார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு முதல் கட்டமாக இன்று 8 லாரிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உதவ விரும்பும் மக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யலாம். பிஸ்கட், தண்ணீர் பாக்கெட்டுகளை தவிர்த்து பிற நிவாரண பொருட்களை வழங்கலாம் என்றார்.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி வேலூர் மாவட்ட கிளையின் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை 3 வாகனங்கள் மூலம் கலெக்டர் ராமன், சென்னையில் உள்ள கவர்னர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். அவை அங்கிருந்து கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், ரூ.2 லட்சம் நிவாரண தொகையும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் வேலூர் மாவட்ட கிளை செயலாளர் இந்தர்நாத், அவைத் தலைவர் பர்வதா, பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர் உதயசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story