சேலத்தில், வெவ்வேறு இடங்களில் விபத்து: லேப்டெக்னீசியன் உள்பட 3 பேர் பலி


சேலத்தில், வெவ்வேறு இடங்களில் விபத்து: லேப்டெக்னீசியன் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 21 Aug 2018 7:12 AM IST (Updated: 21 Aug 2018 7:12 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் லேப்டெக்னீசியன் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சூரமங்கலம், 

சேலம் கருப்பூர் அருகே உள்ள மூங்கில்பாடியை சேர்ந்தவர் பெரியண்ணன்(வயது 21), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பரான ரெட்டியூரை சேர்ந்த ரஞ்சித்குமார்(20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மாமாங்கத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பினர். மோட்டார் சைக்கிளை பெரியண்ணன் ஓட்டினார்.

ஜாகீர்ரெட்டிப்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி எதிரே இருந்த வேகத்தடையை கவனிக்காமல் அவர் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது நிலைத்தடுமாறி அருகில் இருந்த தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பெரியண்ணன் தலை தடுப்பு சுவரில் மோதி பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த ரஞ்சித்குமார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ்(27). இவர் ஜாகீர்ரெட்டிப்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் லேப்டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் பணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரகாஷ்ராஜ் அருகில் இருந்த மின் கம்பம் மீது மோதி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மாமாங்கம் மெயின் ரோட்டில் சுமார் 40 வயதுடைய ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து உடனடியாக அடையாளம் தெரியவில்லை. அவர் மீது மோதிய வாகனத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் இந்த விபத்துகள் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story