ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 1.50 லட்சம் கனஅடியாக குறைப்பு


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 1.50 லட்சம் கனஅடியாக குறைப்பு
x
தினத்தந்தி 21 Aug 2018 2:09 AM GMT (Updated: 21 Aug 2018 2:09 AM GMT)

ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. மேலும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர், 

கர்நாடகா, கேரள மாநிலங்களில் பெய்த கனமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கும் மேல் உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. மேலும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கும் நீர்வரத்து குறைந்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. எனினும் ஒகேனக்கல்லில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஐந்தருவிகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

மேலும் ஒகேனக்கல் நடைபாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும், மெயின் அருவி, சினிபால்சில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 43-வது நாளாக நீடித்தது. மேலும் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 11-வது நாளாக நீடித்தது.

காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகளை மடம் கிராமத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும் ஒகேனக்கல், ஊட்டமலை, நாகமரை உள்ளிட்ட கரையோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்ததால், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் வினாடிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் நேற்று இரவு தண்ணீர் வரத்து மேலும் குறைந்தது. இதன்படி அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.

16 கண்பாலம் வழியாக வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீரும், நீர்மின் பாதை வழியாக வினாடிக்கு 24 ஆயிரத்து 200 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உபரிநீர் கடந்து செல்லும் பாதையில் தண்ணீரின் ஆர்ப்பரிப்பு சற்று குறைந்துள்ளது.

அதே போன்று காவிரி ஆற்றங்கரையை தாண்டி அருகில் உள்ள தார் சாலையை நோக்கி மேலே வந்த தண்ணீர் வடிந்து வருகிறது. தண்ணீர் திறப்பு குறைந்துள்ள நிலையிலும் மேட்டூர் அணையை காண சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள். இருப்பினும் விடுமுறை நாட்களை விட வார நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக உள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 119.53 அடியாக இருந்தது.

இந்த நிலையில் உபரிநீர் வெளியேறும் பாதையையொட்டி அமைந்துள்ள மேட்டூர் பெரியார் நகரில் வசிக்கும் செல்வம், சரோஜா ஆகியோரின் வீடுகளின் சுவர் நேற்று இடிந்து விழுந்தது. ஆனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுபற்றிய தகவல் அறிந்ததும் மேட்டூர் தாசில்தார் அறிவுடைநம்பி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த 2 வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்களுக்கு நிவாரணத்தொகையாக தலா ரூ.4 ஆயிரத்து 100 வழங்கப்பட்டது. தொடர்ந்து போலீசாரும், வருவாய்த்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேட்டூர்-எடப்பாடி சாலையில் தண்ணீர் சூழ்ந்ததால் நேற்று 5-வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. தண்ணீர் வடிந்த பின்னர் சாலையை ஆய்வு செய்து, அதன்பிறகு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story