வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 53 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு


வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 53 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 21 Aug 2018 11:15 PM GMT (Updated: 21 Aug 2018 7:21 PM GMT)

சாஸ்திரி நகரில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 53 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அடையாறு,

சென்னை சாஸ்திரி நகர் போலீஸ் நிலையம் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் சுமார் 56 கடைகள் அமைக்கப்பட்டது. அந்த கடைகளில் வியாபாரிகள் பலர் ஓட்டல்கள், டீக்கடை, மருந்துக் கடை, மளிகை கடை என வியாபாரம் செய்து வருகின்றனர்.

கடைகளுக்குரிய வாடகையை அவர்கள் மாதந்தோறும் செலுத்தி வந்தனர். கடைகளை வைத்திருக்கும் சிலர் உரிய அனுமதியின்றி வெளி நபர்களுக்கு கடையை மேல் வாடகைக்கு விட்டும், கடைகளின் முன் ஆக்கிரமிப்பு செய்தும், வாடகை தொகையை செலுத்தாமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டதால் ஏற்கனவே இருந்த கடைகளை இடித்து விட்டு புதிதாக ஒரு வணிக வளாகம் கட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முடிவெடுத்தது. ஆகவே கடைகளை காலி செய்து ஒப்படைக்கும்படி கடையின் உரிமையாளர்களுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கடையை காலி செய்ய மறுத்த உரிமையாளர்கள் இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில், 3 மாதங்களில் கடைகளை காலி செய்து தருவதாக உரிமையாளர்கள் உறுதியளித்தனர்.

ஆனால் அவர்கள் கூறியபடி கடையை காலி செய்யவில்லை. இதற்கிடையே கடையை அகற்றுவதற்காக உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் விதித்த காலக்கெடுவும் முடிவடைந்தது.

இந்த நிலையில் நேற்று காலை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் சுமார் 50 தொழிலாளர்கள், பொக்லைன் எந்திரத்துடன் சாஸ்திரி நகர் போலீஸ் நிலையம் அருகே உள்ள இடத்திற்கு சென்றனர்.

பின்பு அங்கு உள்ள கடைகளில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்து கடைகளுக்கு பூட்டு போட்டு ‘சீல்’ வைத்தனர், மேலும் அங்கு சில கடைகளில் அமைக்கப்பட்டு இருந்த நிழற்கூரைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள்.

கடைகளை ‘சீல்’ வைத்தபோது வியாபாரிகள் சிலர், கடைகளை காலி செய்ய மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் எனக்கோரி செயற்பொறியாளர் ராமகிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அடையாறு போலீசார் வியாபாரிகளை சமரசம் செய்தனர்.

மொத்தம் உள்ள 56 கடைகளில் நேற்று 53 கடைகள் காலி செய்யப்பட்டு அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்டது. மீதம் உள்ள 3 கடைகளில், 2 கடைகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் ஓரிரு நாட்களில் ‘சீல்’ வைக்கப்படும் எனவும் ஒரு கடை சம்பந்தமாக கோர்ட்டு தடை உத்தரவு உள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வணிக வளாகம் கட்டுவதற்காக கூடிய விரைவில் இந்த கடைகள் இடித்து அகற்றப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வணிக வளாகம் கட்டுவதற்காக தங்களை இங்கு இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாகவும், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் வியாபாரிகள் குற்றம்சாட்டினார்கள்.

Next Story