வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை


வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 21 Aug 2018 10:15 PM GMT (Updated: 21 Aug 2018 7:42 PM GMT)

வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து இருளர் இன மக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சிற்றம்பாக்கம் கிராமம் இருளர் காலனியை சேர்ந்த திரளான இருளர் இன மக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட இருளர் முன்னேற்ற சங்க நிறுவனர் பிரபு தலைமையில் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், நாங்கள் சிற்றம்பாக்கம் இருளர் காலனியில் காலம் காலமாக குடும்பத்தினருடன் வசித்து வருகிறோம். நாங்கள் கிராம நத்தம் புறம்போக்கு பகுதியில் குடியிருந்து வருகிறோம். இந்த நிலையில் அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்கள் பகுதிக்கு வந்து குடியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு தெரிவித்தனர். வீடுகளை காலி செய்யாவிட்டால் போலீசார் மூலம் வீடுகளை இடித்து விடுவோம் என மிரட்டினார்கள். இதனால் நாங்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானோம். எனவே சிற்றம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் எங்கள் வீடுகளை அகற்றக்கூடாது என வலியுறுத்தியும், வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முறையிட வந்தோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story