திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 21 Aug 2018 11:45 PM GMT (Updated: 21 Aug 2018 8:17 PM GMT)

தினகரன் ஒரு பொருட்டே இல்லை, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

மதுரை மாடக்குளம் கண்மாயில் நீர் தேக்குவதற்காக வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. அதனை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம் கண்மாய் பகுதியில் 60 ஏக்கர் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதில் 30 ஏக்கர் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆக்கிரமிப்பையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கண்மாய் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் மதுரையின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாடக்குளம் கண்மாய் சீரமைக்கப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன. தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன. தற்போது மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றிலும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசானது ரூ.48 ஆயிரம் கோடி அளவுக்கு நலத்திட்டப்பணிகளை நிறைவேற்றி உள்ளது. ஜெயலலிதா வழியில் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். எங்களுக்கு எதிரியே இல்லை. டி.டி.வி.தினகரன் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. எதிர்க்கட்சியான தி.மு.க. கூட டெபாசிட் வாங்க முடியாது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழக அரசு செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story