காவிரி கரை புரண்டு ஓடினாலும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கும் வயல்வெளிகள், கருகிய பயிர்கள்


காவிரி கரை புரண்டு ஓடினாலும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கும் வயல்வெளிகள், கருகிய பயிர்கள்
x
தினத்தந்தி 22 Aug 2018 4:30 AM IST (Updated: 22 Aug 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

காவிரி கரைபுரண்டு ஓடினாலும் தாயனூர், அல்லித்துறை பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் வயல்வெளிகள் காய்ந்து கிடக்கின்றன. பயிர்கள் கருகிவிட்டன. இதனால் சாகுபடி பணியை தொடங்க முடியாமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

திருச்சி,

காவிரி ஆற்றில் கடந்த ஒரு மாத காலமாக தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால் காவிரியில் இருந்து  பிரிந்து செல்லும் பழைய கட்டளை வாய்க்காலின் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை. மாயனூரில் இருந்து பிரியும் பழைய கட்டளை வாய்க்கால் குளித்தலை, நெய்தலூர் காலனி, போசம்பட்டி, நச்சலூர், சேப்ளா பட்டி, வியாழன்மேடு, இனாம்புலியூர், தாயனூர், பள்ளக்காடு, கொய்யா தோப்பு வழியாக சென்று இறுதியாக அல்லித்துறையில் நிறைவடைகிறது. இதில் வியாழன்மேடு முதல் அல்லித்துறை வரை கடைமடை பகுதியாகும்.

கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராததால் தாயனூர் பகுதியில் விவசாய நிலங்கள் காய்ந்து கிடக்கின்றன. ஏற்கனவே பயிரிடப்பட்ட சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி போய்விட்டன. பழைய கட்டளை வாய்க்காலில் இருந்து ஆயக்கட்டுகளுக்கு பிரிந்து செல்லும் சிறிய கால்வாய்கள் மற்றும் ஓடைகளும் தண்ணீர் இல்லாமல் மணற்பாங்காக காட்சி அளிக்கின்றன.

இதுபற்றி கடைமடை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில் ‘இந்த பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக வறட்சியால் தண்ணீர் வரவில்லை. ஆனால் இந்த ஆண்டு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு 20 நாட்களுக்கு மேல் ஆகியும் வாய்க்கால் தூர் வாரப்படாததாலும், மதகுகள் சரி செய்யப்படாததாலும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் நாங்கள் நெல் நாற்று நடவு உள்ளிட்ட பணிகளை தொடங்க முடியாமல் தவித்து வருகிறோம்’ என்றனர்.

Next Story