காதுகேட்கும் கருவி வாங்க வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை கேரள நிவாரண நிதிக்கு மாற்றுத்திறனாளி மாணவர் வழங்கினார், முதல்-அமைச்சர் பாராட்டு


காதுகேட்கும் கருவி வாங்க வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை கேரள நிவாரண நிதிக்கு மாற்றுத்திறனாளி மாணவர் வழங்கினார், முதல்-அமைச்சர் பாராட்டு
x
தினத்தந்தி 22 Aug 2018 4:45 AM IST (Updated: 22 Aug 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

காதுகேட்கும் கருவி வாங்க வைத்திருந்த தனது சேமிப்பு பணத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்கிய புதுவை மாணவருக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி பாராட்டு தெரிவித்தார்.

புதுச்சேரி,

கேரள மாநிலத்தில் கடந்த 7–ந் தேதி தொடங்கிய வரலாறு காணாத மழையால் அந்த மாநிலத்தையே புரட்டிப்போட்டிருக்கிறது. கேரளாவுக்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. அனைத்து பகுதிகளில் இருந்தும் உணவு, உடை, நிவாரண பொருட்கள் வாரி வழங்கப்படுகிறது. புதுவை மாநில முதல்–அமைச்சர் நாராயணசாமி புதுவை அரசு சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி, முதல்–அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று அரசு ஊழியர்களும் ஒருநாள் சம்பளத்தை வழங்குவதாக ஏற்றுக்கொண்டனர். இதற்கிடையே கேரள மாநிலத்திற்கு நிவாரண நிதி வழங்குவதற்காக புதுவை முதல்–அமைச்சர் அலுவலகத்தில் தனியாக ஒரு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயஅம்பி. புதுவை கோர்ட்டில் இளநிலை எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீவள்ளி. வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் ஜெயசூர்யா(16). செவித்திறன் குறைவான மாற்றுத்திறனாளி மாணவர்.

அவர் தற்போது காது கேட்கும் கருவி பயன்படுத்தி வருகிறார். புதுவை புனித அந்தோணியார் அரசு உதவி பெறும் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவருக்கு அரசு மாதந்தோறும் நிதி உதவி வழங்கி வருகிறது.

இந்த நிலையில் அந்த நிதி உதவியில் இருந்து புதிதாக காது கேட்கும் கருவி வாங்க வைத்திருந்த பணத்தை கேரள நிவாரண நிதிக்காக வழங்க முடிவு செய்தார். இது குறித்து ஜெயசூர்யா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவர் ஜெயசூர்யா நேற்று மாலை தனது பெற்றோருடன் சட்டசபை வளாகத்திற்கு சென்றார்.

அங்கு முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து கேரள வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட முதல்–அமைச்சர் நாராயணசாமி அந்த மாணவருக்கு பாராட்டு தெரிவித்து அவருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


Next Story