திருமணத்தன்று ஓட்டம் பிடித்த புதுமாப்பிள்ளை போலீஸ் நிலையத்தில் சரண்


திருமணத்தன்று ஓட்டம் பிடித்த புதுமாப்பிள்ளை போலீஸ் நிலையத்தில் சரண்
x
தினத்தந்தி 22 Aug 2018 3:45 AM IST (Updated: 22 Aug 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் திருமணத்தன்று ஓட்டம் பிடித்த புதுமாப்பிள்ளை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவர் தலைமறைவானது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

சேலம், 


சேலம் கிச்சிப்பாளையம் ஓந்தாப்பிள்ளைக்காட்டை சேர்ந்தவர் வினோத் (வயது 27). இவர் மல்லூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கரூரை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவருக்கும் கடந்த 17-ந் தேதி சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென வினோத் தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மேலும் அவருடைய செல்போன் எண் மூலம் போலீசார் விசாரித்ததில், அவர் மல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் திருமணத்தன்று ஓட்டம் பிடித்த புதுமாப்பிள்ளை வினோத் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் திடீரென சரண் அடைந்தார். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

வினோத் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து உள்ளார். மேலும் வினோத்துக்கு அடிக்கடி கோபம் வரும். எதற்கெடுத்தாலும் கோபப்படுவதால் அந்த பெண் காதலை முறித்து கொண்டார். இந்த நிலையில் கரூரை சேர்ந்த பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் அவருடைய உறவினர்கள் அவரை இரவு 9 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்றும், நண்பர்களுடன் பேசக்கூடாது என்றும் பல நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

அதை மீறி செல்லும் வினோத் இரவு நேரங்களில் தனது வீட்டின் சுவர் ஏறி குதித்து வெளியே சென்று விட்டு, மீண்டும் அந்த வழியே வீட்டுக்கு வருவது வழக்கமாக கொண்டு உள்ளார். இதனால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது. இதனால் வினோத் திருமணத்தன்று வீட்டை விட்டு வெளியேறினார். அவர் கோவையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்து செருப்பு கடையில் வேலை பார்த்துள்ளார்.

பின்னர் போலீசார் தேடுவதை அறிந்து போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். மேலும் நிச்சயித்த பெண்ணை மீண்டும் திருமணம் செய்து கொள்ள அவர் தயாராக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். போலீஸ் நிலையத்தில் அவருடைய பாட்டி செல்வி, மானத்தை வாங்கிவிட்டாயே என்று கூறி கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதையடுத்து போலீசார் வினோத்தை எச்சரித்து, உறவினர்களிடம் அனுப்பி வைத்தனர். 

Next Story