பெருமாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருமயம்,
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் பிரசித்தி பெற்ற சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூரத்திருவிழா கடந்த 12–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியதில் இருந்து தினமும் மண்டகப்படி சார்பில் சுவாமிக்கு 18வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகள் நடந்தது. தினமும் இரவு சத்திய மூர்த்தி பெருமாள் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 16–ந்தேதி கருடசேவையும், தொடர்ந்து சத்தியமூர்த்தி பெருமாள், ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு பால், பழம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சத்தியமூர்த்தி பெருமாள்–ஆண்டாளுடன் எழுந்தருளினார். தொடர்ந்து கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷத்துடனும், மேள, தாளங்கள் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அப்போது ஒவ்வொரு வீதியிலும் கூடிநின்ற பக்தர்கள் சத்தியமூர்த்தி பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது.
தேரோட்டத்தையொட்டி ஆன்மிக சான்றோர்கள், பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே நீர் மோர் மற்றும் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் திருமயம், நமணசமுத்திரம், புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.