தந்தை கண் முன் நர்சை தாக்கி நகை பறிப்பு


தந்தை கண் முன் நர்சை தாக்கி நகை பறிப்பு
x
தினத்தந்தி 21 Aug 2018 10:38 PM GMT (Updated: 21 Aug 2018 10:38 PM GMT)

ஊத்தங்கரை அருகே தந்தை கண்முன் நர்சை தாக்கி நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊத்தங்கரை,

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டையை அடுத்த ரெட்டியூரை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 50). விவசாயி. இவருடைய மகள் விந்தியா(23). நர்சு. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகம் தனது மகள், தம்பி மணிவாசன் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் ரெட்டியூரில் இருந்து சிங்காரம்பேட்டைக்கு சென்றார். அப்போது பெரிய தள்ளப்பாடி அருகே சென்ற போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் தடுமாறி இவர்கள் 3 பேரும் கீழே விழுந்தனர்.

உடனே அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் இவர்கள் 3 பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டியும், விந்தியாவை கத்தியால் குத்தி அவரது தந்தை கண்முன்னே அவர் அணிந்து இருந்த 2 பவுன் நகையை மிரட்டி பறித்து கொண்டனர். அது மட்டுமின்றி அந்த வாலிபர்கள் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் அந்த வாலிபர்கள் அதே மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

கத்திக்குத்தில் காயம் அடைந்த விந்தியா ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் தந்தை கண்முன் நர்சை தாக்கி நகையை பறித்தது பெரிய தள்ளப்பாடியை சேர்ந்த ஸ்ரீசாந்த்(24), வினோத் ஆகிய 2 பேர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற வேறு ஏதேனும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறார்களா? எனவும் விசாரணை நடக்கிறது. 

Next Story