ஈரோடு: நுகர்வோர் புகார் தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்


ஈரோடு: நுகர்வோர் புகார் தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்
x
தினத்தந்தி 21 Aug 2018 11:27 PM GMT (Updated: 21 Aug 2018 11:27 PM GMT)

நுகர்வோர் புகார் தெரிவிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

நுகர்வோர் புகார் தெரிவிக்க NM-C-TS என்ற புதிய செயலியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலி மூலமாக, நுகர்வோர் தாங்கள் வாங்கும் பொட்டல பொருட்களில் தயாரிப்பாளர் பெயர், முகவரி, எடை, தயாரிக்கப்பட்ட தேதி, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, நுகர்வோர் புகார் தெரிவிக்கும் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகியன விடுபட்டு இருந்தால் புகார் தெரிவிக்கலாம். மேலும், அதிக விலைக்கு விற்பனை செய்தாலும், எடையளவு சட்டம் தொடர்பான முரண்பாடுகள் இருந்தாலும் புகார் செய்யலாம்.

குறைபாடுகளை புகார் தெரிவிக்கும்போது சம்பந்தப்பட்ட கடைகள் அல்லது நிறுவனங்களின் பெயர், முகவரியை பதிவு செய்ய வேண்டும். இந்த புகார் குறித்து தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர்கள் மூலம் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், புகார் பதிவு செய்பவர்களுடைய விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். எனவே நுகர்வோர் இந்த செயலியை பயன்படுத்தி உடனுக்குடன் புகார் தெரிவித்து பயன்பெறலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

புதிய செயலி குறித்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு டாக்டர் ஆர்.ஏ.என்.எம். கலை அறிவியல் கல்லூரி, தாளவாடி ஜெ.எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளிக்கூடம், டி.என்.பாளையம் ஜே.கே.கே.எம். தொழில்நுட்ப கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஈரோடு மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் தெரிவித்து உள்ளார்.

Next Story