அரசு அலட்சியம் காட்டியதால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை முத்தரசன் பேட்டி


அரசு அலட்சியம் காட்டியதால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 23 Aug 2018 4:30 AM IST (Updated: 22 Aug 2018 10:52 PM IST)
t-max-icont-min-icon

அரசு அலட்சியம் காட்டியதால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை என முத்தரசன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி, சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் வறண்ட நிலையில் உள்ள ஏரி, குளங்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் சென்று பார்வையிட்டார்.

விளங்குளம் ஏரி, புதுக்கோட்டை உள்ளூர் ஏரி, செல்லுகுறிச்சி ஏரி, ஊமத்தநாடு ஏரி, கொரட்டூர் ஏரி, பள்ளத்தூர் ஏரி, செங்கமங்கலம் கொண்டிக்குளம் ஏரி, பேராவூரணி பெரிய ஏரி ஆகியவற்றை பார்வையிட்ட அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–


கடைமடை பகுதி வாய்க்கால்களை முறையாக தூர்வாராமல் அரசு அலட்சியம் காட்டியதால், கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. நீர்வரத்து பாதைகள் அடைபட்டுள்ளது. புதர் மண்டி கிடக்கும் பாதைகளை சீரமைத்து தண்ணீர் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பக்கம் தண்ணீர் கடலில் சென்று கலக்கும்போது, ஒருபக்கம் வறட்சி நீடிப்பதற்கு நீர் மேலாண்மையில் மாவட்ட நிர்வாகம் தோல்வி அடைந்து விட்டது தான் காரணம்.

முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடைந்துவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் இங்கு வந்து பார்க்கும்போது அனைத்து ஏரி, குளங்களிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை.


எந்த ஏரியையும் முறையாக தூர்வாரவில்லை. டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர் வேளாண்மை அமைச்சராக இருந்தபோதும் கூட இப்பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. மேட்டூர் அணை நிரம்பியும் இப்பகுதிக்கு தண்ணீர் வராமல் இருப்பது அரசின் அலட்சியத்தை காட்டுகிறது.

இன்னும் காலம் தாழ்த்தாமல் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் கட்சி பாகுபாடின்றி விவசாயிகளை ஒன்று திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story