ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் 3 பேர் கைது


ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Aug 2018 9:45 PM GMT (Updated: 22 Aug 2018 6:59 PM GMT)

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மணல் கடத்தலுக்கு இடையூறாக இருந்ததால் அவரை தீர்த்துக்கட்டியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உளுந்தூர்பேட்டை,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்ஜபார் (வயது 64). ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரான இவர் திருக்கோவிலூர் இந்திரா நகரில் வசித்து வந்தார். இவருக்கு எடப்பாளையம் கிராமத்தில் இருந்து சித்தலிங்கமடம் செல்லும் சாலையில் சொந்தமாக நிலம் உள்ளது.

இந்த நிலத்தில் நெல், கரும்பு பயிர் செய்திருந்த அப்துல்ஜபார், தினமும் திருக்கோவிலூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் நிலத்திற்கு சென்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு வருவது வழக்கம். இதற்காக அவர் தனது நிலத்திலேயே ஒரு வீடு கட்டி வைத்துள்ளார். சில சமயங்களில் அந்த வீட்டிலேயே தங்கியும் வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி, எடப்பாளையம் கிராமத்தில் உள்ள வீட்டில் உடலில் ரத்தக்காயங்களுடன் அப்துல்ஜபார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடந்த ஒரு ஜோடி செருப்பையும் தடயமாக எடுத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையே உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ் ஆகியோர் மேற்பார்வையில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

தனிப்படை போலீசார் முதற்கட்டமாக திருக்கோவிலூர் சாலையில் உள்ள செல்போன் டவர்களில் பதிவான செல்போன் எண்களை வைத்து விசாரணையை தொடங்கினர். அதன்அடிப்படையில் டி.எடப்பாளையத்தை சேர்ந்த மோகன், இவரது தம்பி ரவி மற்றும் செல்வம் உள்ளிட்ட 20 நபர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் 20 பேரிடமும் தனிப்படை போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இதையடுத்து இந்த 20 பேருக்கும், கொலை செய்யப்பட்ட அப்துல்ஜபாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று அப்துல்ஜபாரின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அப்துல்ஜபாரின் அண்ணன் சம்சுதீன், டி.எடப்பாளையத்தை சேர்ந்த மோகன் என்பவர் வந்து அப்துல்ஜபார், அடிக்கடி எங்களை மணல் கடத்துவது தொடர்பாக தாசில்தாரிடம் மாட்டி விடுகிறார். எனவே அவரை கண்டிக்குமாறு என்னிடம் கூறினார் என்று தெரிவித்தார்.

இதையடுத்து திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மோகன், ரவி, செல்வம் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், மோகன், ரவி மற்றும் பெங்களூரு கூலிப்படையை சேர்ந்த திலிப்குமார் ஆகிய 3 பேர் சேர்ந்து அப்துல்ஜபாரை கொன்றதும், இதற்காக செல்வம் திட்டம் திட்டி, அப்துல்ஜபாரின் நடவடிக்கைகள் குறித்து மோகனுக்கு தகவல் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து மோகன், ரவி, செல்வம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து கார், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் மோகன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நான் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நிற்பதற்கு ஆசைப்பட்டேன். அதற்கு அதிகளவு பணம் தேவைப்பட்டதால், மணல் கடத்தல் தொழிலில் ஈடுபட முடிவு செய்தேன். அதன்படி எனது தொழிலும் சிறப்பாக சென்று கொண்டிருந்தது. ஆனால் சில நாட்களாக எனது லாரி, திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர், மணலூர்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சோதனைக்குள்ளாக்கப்பட்டு பிடிபட்டது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்ஜபார் தான் காரணம் என எனக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை எச்சரித்தும் அவர் கேட்டவில்லை. இதனால் எனக்கு தொழில்செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். இதுகுறித்து பெங்களூரு கே.ஆர்.புரத்தில் உள்ள எனது அண்ணன் மகன் திலீப்குமாரிடம் செல்போன் மூலம் தெரிவித்தேன்.

அப்போது அவர், 2 நாட்களுக்கு முன்பு எனது நண்பர்களுடன் சேர்ந்து மஞ்சுநாதா என்பவரை ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்துவிட்டேன். நண்பர்கள் கைது செய்யப்பட்டதால், நான் மட்டும் தலைமறைவாக உள்ளேன். எனவே நான் அங்கு வந்து அப்துல்ஜபார் கதையை முடித்து விடுகிறேன் என்று கூறினார். இதையடுத்து எனது தம்பி ரவி, செல்வத்தை உதவிக்கு அழைத்தேன்.

இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி அன்று அப்துல்ஜபார் நிலத்தில் உள்ள வீட்டில் இருப்பதாக செல்வம் எங்களுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து நான், ரவி, திலிப்குமார் ஆகிய 3 பேரும் ஒரு காரில் டி.எடப்பாளையத்துக்கு சென்றோம். அங்கு அவரது நிலத்தில் படுத்திருந்த அப்துல்ஜபாரை கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றோம். இந்த நிலையில் மீண்டும் பெங்களூரு சென்ற திலிப்குமாரை, மஞ்சுநாதா கொலை வழக்கில் கைது செய்தனர். ஆனால் நாங்கள் 3 பேரும் எதுவும் நடக்காதது போல் இருந்து வந்தோம். இருப்பினும் போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தினார். மேலும் இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரையும் அவர் பாராட்டினார். கொலை செய்யப்பட்ட அப்துல்ஜபார் மற்றும் கைது செய்யப்பட்ட 3 பேரும் டி.எடப்பாளையத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Next Story