லாரி உரிமையாளர் வீட்டை போலீசார் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை


லாரி உரிமையாளர் வீட்டை போலீசார் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 23 Aug 2018 3:30 AM IST (Updated: 23 Aug 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

சத்துவாச்சாரி மூலக்கொல்லையில் மணல் கடத்தலில் தொடர்புடைய லாரி உரிமையாளர் வீட்டை போலீசார் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர், 


சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மூலக்கொல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பாலாற்றில் இருந்து மணல் கடத்தி நிறுத்தப்பட்டிருந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்த லாரி டிரைவர் அஜித் (வயது 21) ‘லாரியில் இருக்கும் மணல் ரவுடி வசூர்ராஜாவுடையது, லாரி மூலக்கொல்லையை சேர்ந்த பாஸ்கருக்கு சொந்தமானது’ என்று கூறினார். இதுகுறித்து வசூர்ராஜாவுக்கும், பாஸ்கருக்கும் டிரைவர் அஜித் தகவல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து சிறிதுநேரத்தில் அங்கு மோட்டார் சைக்கிளில் பாஸ்கர் மற்றும் வசூர்ராஜாவும் வந்தனர். லாரியை உடனடியாக விடுவிக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக வசூர்ராஜா கத்தியை காட்டி சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜிக்கு மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு வசூர்ராஜா சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்த சமயத்தில் பாஸ்கர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். வசூர்ராஜாவுடன், அஜித்தையும் போலீசார் கைது செய்தனர்.
மணல் கடத்தல் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து வசூர்ராஜா மற்றும் அஜித்தை வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர். போலீசாரின் விசாரணையில், பாஸ்கர், வசூர்ராஜாவுடன் இணைந்து மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தப்பியோடிய பாஸ்கரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், பாஸ்கர் தினமும் நள்ளிரவில் வீட்டிற்கு வந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை சத்துவாச்சாரி போலீசார் மூலக்கொல்லையில் உள்ள லாரி உரிமையாளர் வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்று சோதனையிட்டனர். அங்கு பாஸ்கர் இல்லை.
இதையடுத்து தனிப்படை போலீசார் லாரி உரிமையாளர் தலைமறைவாக உள்ள இடம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரித்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

அதிகாலையில் லாரி உரிமையாளர் வீட்டை போலீசார் சுற்றி வளைத்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story