பேரையூர் தாலுகாவில் தொடரும் கனிமவள கொள்ளை: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்


பேரையூர் தாலுகாவில் தொடரும் கனிமவள கொள்ளை: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Aug 2018 4:15 AM IST (Updated: 23 Aug 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் தொடர்ந்து செம்மண், கண்மாய் வண்டல் மண், கொள்ளை போய் வருகிறது.இந்த கனிமவள கொள்ளையை தடுத்து எதிர்கால சந்ததியினருக்கு கொஞ்சமாவது விட்டு வைக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பேரையூர்,

பேரையூர் தாலுகாவில் மேற்குதொடர்ச்சி மலைகள் மற்றும் வாசிமலை, மண்மலை,கவரிமலை,தேக்குமலை,தேன்மலையாண்டி மலை என்று மலைகள் உள்ளன.இந்த மலைகளில் பெய்யும் மழையால் இப்பகுதி ஓடை மற்றும் ஆறுகளில்,மழைநீர் பெருக்கெடுத்தோடும். அதோடு மலைகளில் இருந்து வண்டல் மணலும் வரும்.இந்த மணல் ஓடைகளில் தேங்கும். இதனால் ஓடை,ஆறுகள் அருகே உள்ள கிணறுகளில் நீர்மட்டம் பெருகும். விவசாயமும் நன்றாக நடைபெறும். மேலும் நிலத்தடி நீர் ஓட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் ஆதாரமும் உருவாகும்.

பேரையூர் தாலுகாவில் மேலப்பட்டி, சந்தையூர்,கீழப்பட்டி,பாறைபட்டி,தும்மநாயக்கன்பட்டி,பேரையூர்,விஜயநகையாபுரம்,பழையூர்,சாப்டூர்,கருவாட்டு அணை, வண்டாரி,கிருஷ்ணாபுரம்,மல்லபுரம்,எழுமலை ஆகிய பகுதிகள் மலையடிவாரப்பகுதிகளில் உள்ளதால் இங்கு எல்லாம் ஓடைகள்,ஆறுகள் உள்ளன.கடந்த 20 வருடங்களாக இந்த ஓடைகளில் எல்லாம் போதுமான அளவில் மணல் திருடப்பட்டு தற்போது கட்டாந்தரையாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் கடந்த சில வருடங்களாக கிணற்று பாசனம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது.இந்த மணல் எல்லாம் மாட்டு வண்டிகளிலும்,டிராக்டர்கள்,லாரிகளில் அள்ளப்பட்டு கொள்ளைபோய் விட்டது.

ஓடை மணல் முற்றிலும் சுரண்டப்பட்ட உடன் சமீபகாலமாக செம்மண் திருட்டு நடைபெறுகிறது. இப்பகுதியில் உள்ள ஒருசிலர் விவசாய பயன்பாட்டுக்கு என்று செம்மண் அள்ள அனுமதி வாங்கி விட்டு அவற்றை வணிக பயன்பாட்டிற்கு விலைக்கு விற்பனை

செய்கின்றனர்.விவசாயிகள் தங்கள் நிலத்தை செம்மை படுத்துவதற்கும், மண்வளத்தை மேம்படுத்துவதற்கும் வண்டல்மண்தேவை.அதற்காக வருவாய்த்துறை அனுமதி தேவை.வருவாய்த்துறையினர் கனிம வள விதிப்படியும்,அரசாணை படியும் நஞ்சை என்றால் 30 நடையும்,புஞ்சை என்றால் 25 நடையும் எடுப்பதற்கு அனுமதி கொடுப்பார்கள். ஒரு சில விவசாயிகளின் வறுமையை மணல் கொள்ளையர்கள் பயன்படுத்தி நாங்கள் எடுக்கிறோம் என்று பலநூறு நடைகள் எடுத்து செம்மண் திருட்டில் ஈடுபடுகின்றனர்.

இந்த மண்ணை செங்கல் காலவாசலுக்கும்,மண்பானைகள் செய்வதற்கும்,வீடுகளுக்கு தரை தளத்தை சமப்படுத்துவதற்கும் அதிக விலைக்கு விற்கின்றனர்.விவசாய பயன்பாட்டிற்கு என்று அனுமதி வாங்கி விட்டு வணிக பயன் பாட்டிற்கு விற்கின்றனர்.தற்போது பல இடங்களில் விவசாய காடுகளில் முறை கேடாக மணல் அள்ளப்பட்டதால் பெறும்பள்ளங்களாக காட்சி தருகிறது. 3 அடி தோண்ட வேண்டிய இடத்தில் 15 அடிமுதல் 20அடிவரை தோண்டப்படுகிறது.

இதேபோல் தான் தற்போது கண்மாய் மண்ணும் கொள்ளை போய்கிறது.அதிகாரிகள் திருட்டுத்தனமாக அனுமதி இல்லாமல் மணல் மற்றும் செம்மண் ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்களை பிடித்து நடவடிக்கை எடுத்து வருவது இதற்கு சாட்சி ஆகும். ஆனால் மண் மற்றும் மணல் திருடப்படுவது மட்டும் குறையவில்லை என்பதுதான்முக்கியம்.போலீசார்கள் ரோந்தின்போது அனுமதி இல்லாமல் மண் மற்றும் மணல் ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்கின்றனர்.

வருவாய்துறையும்,திருட்டு மணல் தடுப்பு சோதனையில் அனுமதி இல்லாமல் கொண்டு வரும் வாகனத்தை பறிமுதல்செய்து ரூ.25ஆயிரம் அபராதம் விதிக்கின்றனர்.அப்படியும் திருட்டு மணல், செம்மண் கடத்தல் நிற்கவில்லை.தமிழ் நாட்டிலேயே கடந்த சில வருடங்களாக அதிக மணல் திருட்டு சம்பந்தமாக வழக்குகளும்,அபராதமும் பேரையூர் தாலுகாவில் மட்டுமே நிகழ்துள்ளது. ஆனாலும் மணல் திருட்டு தொடர்கதையாக உள்ளது.கடந்த 3 மாதத்தில் மட்டும் வருவாய்த்துறையினர் 32 வாகனங்களை பிடித்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:– பேரையூர் தாலுகாவில் முற்றிலும் மணல் கடத்தலை நிறுத்த வேண்டும் என்றால் வருவாய்த்துறை, போலீசார்,வனத்துறை ஆகியோர் கொண்ட குழு அமைத்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். பிடிபடும் வாகனங்களை அரசுடமை ஆக்கவேண்டும். மணல் திருட்டில் அடிக்கடி பிடிபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்தால் தான் வரும் சந்ததியினருக்கு கொஞ்சமாவது கனிமவளம் கிடைக்கும்.கனிம வளத்தை காப்பாற்றினால் மீண்டும் விவசாயம் நன்றாக நடை பெறும்.நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.குடிநீர் பஞ்சமும் ஏற்படாது.

பேரையூர் தாலுகாவில் போதிய அளவில் விவசாயம் இல்லை,வேலைவாய்ப்பு கொடுக்கக்கூடிய தொழிற்சாலைகள் இல்லை.கிராமங்கள் முன்னேறுவதற்கான தொழில் வாய்ப்புகள் இல்லை.வேலைவாய்ப்பு பெற முடியாத ஒருசிலர் தான் இந்த அனுமதி இல்லாமல் மணல் அள்ளும் வேலையில் ஈடுபடுகின்றனர். திருட்டு மணல் கடத்துபவர்களுக்கு வேலை வாய்ப்பு,வங்கி கடன், வாங்கி கொடுத்தால் கனிமவளம் சுரண்டப்படுவது குறையும். இதனால் எதிர்கால சந்ததியினருக்கு எல்லா வளமும் கிடைக்கும். எனவே பேரையூர் தாலுகாவில் கனிமவள கொள்ளையை தடுக்கவேண்டும். மணல் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு வழங்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story