ஜெகதாப்பட்டினம் விசைப்படகில் இலங்கை கடற்படையினர் படகால் மோதினர் 6 மீனவர்களை பிடித்து சென்றனர்


ஜெகதாப்பட்டினம் விசைப்படகில் இலங்கை கடற்படையினர் படகால் மோதினர் 6 மீனவர்களை பிடித்து சென்றனர்
x
தினத்தந்தி 23 Aug 2018 4:30 AM IST (Updated: 23 Aug 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் விசைப்படகில் இலங்கை கடற்படையினர் படகால் மோதினர். பின்னர் அதில் இருந்த 6 மீனவர்களையும் அவர்கள் பிடித்து சென்றனர்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்திலிருந்து தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை ஏராளமான மீனவர்கள் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பாலமுருகன்(வயது 29), கடல்ராஜா(35), முத்துபாண்டி(24), திருமேனி(47), முருகன்(32), முத்து(45) ஆகிய 6 பேரும் கடலுக்கு சென்றனர். இவர்கள் 6 பேரும் நெடுந்தீவு அருகே 30 நாட்டிக்கல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், செந்தில்குமாருக்கு சொந்தமான விசைப்படகில் மோதினர். இதனால் அந்த படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதனால் பாலமுருகன் உள்பட 6 மீனவர்களும் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டனர். இதையடுத்து இலங்கை கடற்படையினர் கடலில் தத்தளித்த 6 மீனவர்களையும் மீட்டனர். பின்னர் இலங்கை கடற்படையினருக்கு சொந்தமான படகில், 6 மீனவர்களையும் ஏற்றி கொண்டு காங்கேசன் ராணுவ முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெகதாப்பட்டினம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் காப்பாற்றி கொண்டு சென்றார்களா? அல்லது கைது செய்து கொண்டு சென்றார்களா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இது குறித்து தமிழக கடலோர காவல் குழுமத்தினர், மீன்வளத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story