கடைமடை பகுதி வரை தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கடைமடை பகுதி வரை தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2018 4:15 AM IST (Updated: 23 Aug 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

அய்யன்வாய்க்கால் பாசன பகுதியில் உள்ள கடைமடை பகுதி வரை தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை உய்யகொண்டான் வாய்க்கால் தலைப்பு பகுதியின் அருகில் இருந்து அய்யன் வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் பெட்டவாய்த்தலை, சிறுகமணி, பெருகமணி, திருப்பராய்த்துறை, கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது அய்யன் வாய்க்காலில் குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு இன்னும் வரவில்லை. எனவே கடைமடை பகுதி வரை தண்ணீர் திறந்து விடக்கோரி முக்கொம்பு பொதுப்பணித்துறை அதிகாரியிடம் பல முறை வலியுறுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி விவசாயிகள் நேற்று காலை பெட்டவாய்த்தலையில் அய்யன் வாய்க்கால் பிரியக்கூடிய தலைப்பு பகுதியில் கூடினர்.

பின்னர் அவர்கள் அய்யன்வாய்க்கால் கடைமடை பகுதி வரை தண்ணீர் திறந்துவிடக்கோரி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, பெட்டவாய்த்தலை சப்- இன்ஸ்பெக்டர் யுவராணி மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள், அய்யன் வாய்க்கால் பிரிய கூடிய தலைப்பு பகுதியில் உள்ள கல்லுவாய்க்கால் மிகவும் பள்ளமாக உள்ளதால் திறக்க கூடிய தண்ணீர் அனைத்தும் கல்லு வாய்க்கால் வழியாகவே செல்கிறது. அய்யன் வாய்க்கால் தலைப்பு பகுதி மேடாக அமைந்துள்ளதால் தண்ணீர் ஏறி வருவதில் மிகுந்த சிரமம் உள்ளது. இதனை சீரமைக்ககோரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை. தற்போது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தபோது கூட பேச்சு வார்த்தை நடத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று வேதனையுடன் கூறினர். பின்னர் அய்யன்வாய்க்கால் கடைமடை பகுதி வரை தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கலைந்து சென்றனர். 

Next Story