காவேரிப்பட்டணத்தில் இருந்து கேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள்


காவேரிப்பட்டணத்தில் இருந்து கேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள்
x
தினத்தந்தி 23 Aug 2018 4:15 AM IST (Updated: 23 Aug 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணத்தில் இருந்து கேரளாவிற்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மற்றும் வியாபாரிகள் 4 லாரிகளில் அனுப்பி வைத்தனர்.

காவேரிப்பட்டணம்,

கேரளாவில் பெய்த கனமழையால் லட்சக்கணக்கான பொதுமக்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்துள்ளனர். 250-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நிவாரண உதவிகள் வந்தவாறு உள்ளது. தமிழ்நாட்டில், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் முன்வந்து பணம் மற்றும் பொருட்களை சேகரித்து கேரளாவிற்கு அனுப்பி வருகின்றனர்.

இதற்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நிவாரண பொருட்கள் சேகரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி மற்றும் வியாபாரிகள் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 4 லாரிகளில் கேரளாவிற்கு அனுப்பி வைத்தனர்.

இதில் 25 கிலோ கொண்ட 840 மூட்டை அரிசி, 1,300 கிலோ கோதுமை, 1,000 கிலோ ரவை, 500 கிலோ பேரீச்சை, 2,000 லிட்டர் சமையல் எண்ணெய், டீத்தூள், சர்க்கரை, உப்பு, மிளகாய்த்தூள் உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் இருந்தன. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் அசோக்குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜமுனா கிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் வாசுதேவன், அண்ணாதுரை, நகர வங்கி தலைவர் சைலேஷ், மலையாண்டஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணன் மற்றும் தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிவாரண பொருட்களை பாலக்காடு கலெக்டர் அலுவலக முகாமில் அசோக்குமார் எம்.பி. நேரில் ஒப்படைத்தார்.

Next Story