மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்


மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 23 Aug 2018 4:00 AM IST (Updated: 23 Aug 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் ஜே.ஆர்.சி. ஆசிரியர்களாக பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்ற மாவட்ட அளவிலான 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். மாவட்ட கன்வீனர் பாலமுருகன் வரவேற்றார். இதில் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேரலாதன், பள்ளி துணை ஆய்வாளர் ஜெயராமன், பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

முதல் நாள் பயிற்சி முகாமில், பள்ளி அளவிலான ஜே.ஆர்.சி. செயல்பாடுகள், முதலுதவி செய்தல் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது. 2-ம் நாள் கண் தானம், ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றில் மாணவர்களின் பங்கு போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதில், ரவிச்சந்திரன், ஜெயப்பிரகாஷ், ரவி, விநாயகம், கணேசன் மற்றும் அன்புச்செழியன் ஆகியோர் கருத்தாளர்களாக பங்கேற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் செய்திருந்தார். இதில் பங்கேற்ற 120 ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- மாணவர்களிடம், யாருக்காக பெற்றோர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று ஆசிரியர்கள் எடுத்து சொல்ல வேண்டும். ஆசிரியர்கள் நினைத்தால் சமுதாயத்தை மாற்ற முடியும். கல்வி தான் ஒருவரை உயர்த்தும் என்பதை மாணவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் பாகுபாடின்றி நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில், காவேரிப்பட்டணம் ஒன்றிய ஆலோசகர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

Next Story