காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த 21 பேர் கைது


காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த 21 பேர் கைது
x
தினத்தந்தி 23 Aug 2018 5:15 AM IST (Updated: 23 Aug 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்த பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்து வருவதாக பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் கள்ளச்சாராய விற்பனையை தடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் நோக்கில் யூகோ வங்கி அருகில் ஒன்று கூடினர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து காவல்துறை தலைமை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். ஊர்வலத்திற்கு பெரியார் திராவிடர் விடுதலைக் கழக புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் கோகுல்காந்திநாத் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் ஆசைத்தம்பி, அந்தோணி, அந்துவான், அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் குபேர் சிலை அருகே சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பேரிகார்டு அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது அவர்கள், உருளையன்பேட்டை பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை பணிஇடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story