ஓட்டல் உரிமையாளர் சாவில் மர்மம் நீடிப்பு - போலீசார் விசாரணை


ஓட்டல் உரிமையாளர் சாவில் மர்மம் நீடிப்பு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 23 Aug 2018 4:48 AM IST (Updated: 23 Aug 2018 4:48 AM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றில் பிணமாக கிடந்த சேலத்தை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சாவில் மர்மம் நீடிப்பதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

சேலம் அம்மாபேட்டை சிங்கமெத்தை பகுதியை சேர்ந்தவர் கோபி(வயது 49). இவர் வீட்டின் கீழ் பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த 14-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவருடைய மனைவி மணிமேகலை அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கோபியை தேடி வந்தனர்.

மேலும் கோபி மாயமான அதே நாளில் அவருடைய நண்பர் மணிகண்டனும் மாயமானார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த 15-ந் தேதி திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காவிரி ஆற்றின் கரையோரம் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவருடைய உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் இறந்து கிடந்தவர் சேலத்தில் மாயமான கோபி என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து சேலம் போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, ‘கோபி மாயமானது குறித்து நாங்கள் விசாரித்தோம். அவர் காவரி ஆற்றில் பிணமாக கிடந்தது குறித்து முசிறி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அவருடைய உடலை போலீசார் அடக்கம் செய்துவிட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், கோபியின் உடலில் காயம் ஏதும் இல்லை. இதனால் இது கொலையாக இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் அவருடைய சாவில் மர்மம் நீடிப்பதால் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்‘ என்றனர். இதற்கிடையில் மாயமான கோபின் நண்பன் மணிகண்டனை காரிப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story