வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார்: விசாரணை நடத்த பெண் போலீஸ் அதிகாரி நியமனம்
வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் மீது மாணவி கூறிய பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த பெண் போலீஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு எதிராக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் படிக்கும் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவருக்கு அந்த கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர் ஒருவர், அந்த மாணவி தங்கி இருக்கும் விடுதிக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. மேலும் அந்த மாணவி தங்கிருந்த விடுதியின் காப்பாளர்களாக உள்ள 2 பெண் பேராசிரியைகள், அந்த உதவி பேராசிரியருக்கு ஒத்துழைப்பு கொடுக்க சொல்லி மாணவியிடம் செல்போனில் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் வாழவச்சனூர் ஊர் பொதுமக்கள் கல்லூரிக்கு சென்று சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரியை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மற்றும் அவரது தந்தை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் புகார் செய்தனர்.
மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான மகிழேந்தி கல்லூரி மாணவியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டார். இதையடுத்து மாவட்ட நீதிபதி மகிழேந்தி வேளாண்மை கல்லூரிக்கு நேரில் சென்று கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.
அதன்பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ய மாவட்ட நீதிபதி, மாவட்ட காவல் துறைக்கு பரிந்துரை செய்தார். மேலும் மக்கள் நீதிமன்றம் மூலம் மாணவியிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலமும் போலீசாரிடம் வழங்கப்பட்டு உள்ளது.
சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி கூறுகையில், ‘இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கல்லூரி மாணவி, உதவி பேராசிரியர், விடுதி காப்பாளர்கள், கல்லூரி முதல்வரிடம் தனித்தனியே விசாரணை நடத்துகிறார். இதையடுத்து அந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படும். யார் தவறு செய்தாலும் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது. கண்டிப்பாக தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
சாலை மறியலில் ஈடுபட முயற்சி
இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் வேளாண்மை கல்லூரியின் முதலாம் மற்றும் இறுதி ஆண்டை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பாலியல் புகார் கூறிய மாணவிக்கு எதிராகவும், உதவி பேராசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கு ஆதரவாகவும் கல்லூரியின் எதிரே கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மாணவர்கள் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு உடன்பாடு ஏற்படாமல் கோஷங்கள் எழுப்பியவாறு சாலையிலேயே நின்று கொண்டிருந்தனர்.
தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து கல்லூரி நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். அதன் பின்னர் மீண்டும் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த சமயத்தில் ஒரு மாணவி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கல்லூரி வாகனத்தின் மூலம் அந்த மாணவியை மீட்டு கல்லூரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா மற்றும் போலீசார் கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் சாந்தி மற்றும் அலுவலர்களும் கல்லூரிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து மாலை 3 மணியளவில் மீண்டும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒன்று திரண்டு கல்லூரி முகப்பு பகுதியில் படியில் அமர்ந்து கல்லூரியை காப்போம், பேராசிரியர்களை காப்போம் என்று கோஷங்கள் எழுப்பியவாறு மீண்டும் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி தொடர்ந்து பரபரப்பாகவே காணப்படுகிறது.
தொடர்ந்து அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்கிடையில் வேளாண்மை கல்லூரியில் தற்போது கல்லூரி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுத 2-ம் ஆண்டு படிக்கும் பாலியல் புகார் கூறிய மாணவி தனது பெற்றோர் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் தேர்வறைக்கு சென்றார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு போலீஸ் பாதுகாப்புடன் கல்லூரியில் இருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டார்.
Related Tags :
Next Story