கொள்ளிடம் மேலணை இடிந்ததால் 50 கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு


கொள்ளிடம் மேலணை இடிந்ததால் 50 கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 24 Aug 2018 4:30 AM IST (Updated: 24 Aug 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் மேலணை இடிந்ததால் 50 கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பள்ளி செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பு பஸ் வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

திருச்சி,

திருச்சி முக்கொம்பில் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்த கொள்ளிடம் மேலணையின் தலைப்பு பகுதி திருச்சி- சேலம் சாலையில் வாத்தலை என்ற கிராமத்தின் அருகே உள்ளது. வாத்தலை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள குணசீலம், ஆமூர், சென்னகரை, சிறுகாம்பூர், குருவம்பட்டி உள்ளிட்ட சுமார் 50 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் கரூர் சாலை வழியாக திருச்சிக்கு வருவதற்கு இந்த அணைக்கட்டு பாலத்தை தான் பயன்படுத்தி வந்தனர். அணை இடிந்து விழுந்து விட்டதால் தற்போது போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

இதனால் 50 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்த கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் பெரும்பாலும் திருப்பராய்த்துறை, ஜீயபுரம் மற்றும் அல்லூரில் உள்ள பள்ளிகளில் தான் படித்து வருகிறார்கள். இவர்கள் இனி இந்த பள்ளிகளுக்கு, வாத்தலை பகுதியில் இருந்து குளித்தலை சென்றோ அல்லது நம்பர்ஒன் டோல்கேட் வழியாக திருச்சிக்கு வந்தோ தான் செல்ல முடியும். இதனால் அவர்கள் தினமும் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே மாணவர்களின் கல்வி, அவர்களது எதிர்காலம் கருதி வாத்தலை பகுதியில் இருந்து மாணவ- மாணவிகளை அழைத்து செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Next Story