தலையில் கல்லைப்போட்டு சிவசேனா கட்சி பிரமுகர் கொலை உறவினர் கைது


தலையில் கல்லைப்போட்டு சிவசேனா கட்சி பிரமுகர் கொலை உறவினர் கைது
x
தினத்தந்தி 24 Aug 2018 5:24 AM IST (Updated: 24 Aug 2018 5:24 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சிவசேனா கட்சி பிரமுகரை தலையில் கல்லைபோட்டு கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.

பிராட்வே,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 32). ஆட்டோ டிரைவரான இவர் தங்கசாலை அங்காளம்மன் கோவில் பூசாரியாகவும் இருந்து வந்தார். மேலும் சிவசேனா கட்சியிலும் பொறுப்பு வகித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (25).

கார்த்திக் ராஜாவின் உறவினரான இவர் நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது, நண்பர் ஒருவரின் திருமணத்துக்கு செல்ல வேண்டும், பணம் கொடு என கார்த்திக் ராஜாவிடம், ஏழுமலை தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது கார்த்திக் ராஜா, ஏழுமலையை ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஏழுமலை அங்கிருந்து கோபத்துடன் சென்றுவிட்டார்.

இதைத்தொடர்ந்து கார்த்திக்ராஜா திட்டியதில் கோபம் அடைந்த ஏழுமலை அதிகளவில் மது அருந்தி உள்ளார். பின்னர் அதிகாலை, கார்த்திக் ராஜா வீட்டுக்கு வந்த ஏழுமலை, அங்கு வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்த அவரது தலையில் கல்லை போட்டும், கத்தியால் கழுத்தையும் அறுத்தார். இதில், கார்த்திக் ராஜா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதற்கிடையே ஏழுமலை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து கார்த்திக்ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அதே பகுதியில் பதுங்கி இருந்த ஏழுமலையை, ஒரு மணி நேரத்தில் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story