ஸ்ரீரங்கம் கோவிலைச்சுற்றி விதிமீறல் கட்டிடங்களை ஆய்வு செய்யக்கோரி வழக்கு, அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்


ஸ்ரீரங்கம் கோவிலைச்சுற்றி விதிமீறல் கட்டிடங்களை ஆய்வு செய்யக்கோரி வழக்கு, அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 25 Aug 2018 4:15 AM IST (Updated: 25 Aug 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் கோவிலைச்சுற்றி விதிமீறல் கட்டிடங்களை ஆய்வு செய்யக்கோரிய வழக்கில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த மகுடேஸ்வரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது–

தமிழகத்தில் பழமையான கோவில்கள் உள்ள பகுதிகளில் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று கடந்த 1997–ம் ஆண்டு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அந்த அரசாணையை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி கோவில் பகுதியில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

கோவிலில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் 73 கட்டிடங்கள் விதிகளை மீறி 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் 7 கட்டிடங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. எனவே மேற்கண்ட கட்டிடங்களை சட்டவிரோதமாக கட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 9 மீட்டர் உயரத்துக்கு மேல் உள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்றும் திருச்சி கலெக்டர், இந்துசமய அறநிலையத்துறை கமி‌ஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடந்த மாதம் 9–ந்தேதி புகார் மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை.

எனவே ஸ்ரீரங்கம் கோவிலைச்சுற்றி விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்ய வக்கீல் கமி‌ஷனர் நியமிக்க வேண்டும். விதிமீறல் கட்டிடங்களை இடிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய தொல்லியல் துறை இயக்குனர், திருச்சி கலெக்டர், இந்துசமய அறநிலையத்துறை கமி‌ஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story