வேலூரில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


வேலூரில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2018 4:24 AM IST (Updated: 25 Aug 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி வேலூரில் தமிழக அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்,

அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரமோகன், புகழேந்தி, குலசேகரன், இளங்கோ ஆகியோர் தலைமை தாங்கினர்.

தமிழக அரசு டாக்டர்களுக்கு, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்கப்படுவதை 13 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டம், சுகாதார திட்டங்கள் தொடர்பான அறிக்கைகள் அனுப்புவதை தவிர்த்தல், முத்துலட்சுமி ரெட்டி பண உதவி திட்டம் புறக்கணிப்பு செய்வது, செப்டம்பர் மாதம் 12-ந் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடுவது, 21-ந் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும்.
 
அதன்பிறகும் அரசு செவிசாய்க்கவில்லை என்றால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story