வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போது கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் பூட்டியிருந்ததால் தி.மு.க.வினர் முற்றுகை


வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போது கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் பூட்டியிருந்ததால் தி.மு.க.வினர் முற்றுகை
x
தினத்தந்தி 26 Aug 2018 4:30 AM IST (Updated: 25 Aug 2018 9:56 PM IST)
t-max-icont-min-icon

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, அலுவலகம் பூட்டியிருந்ததால் தி.மு.க.வினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். வந்தனர். ஆனால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் தி.மு.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமானூர் பகுதியில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்– மறியலில்ஈடுபட்டனர்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்த இடைக்கட்டு கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தல் ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. நேற்று காலை சுமார் 10 மணியளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முல்லைநாதன் தலைமையில் 20–க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர்.

ஆனால் அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. அலுவலகம் வளாக கேட்டும் பூட்டி இருந்தது. இதனை கண்டித்து தி.மு.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வந்த மீன்சுருட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் வசந்த், திவாகர் மற்றும் போலீசார் தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். இதையடுத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

திருமானூர் ஒன்றியத்தில் திருமானூர், அரண்மனைக்குறிச்சி, இலந்தைகூடம், கீழகுளத்தூர், வெங்கனூர் மற்றும் குலமாணிக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. அதற்கான தேர்தல் நேற்று நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் நேற்று திருமானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு திரண்டனர். ஆனால் அலுவலகம் மதியம் 2 மணி வரை திறக்கப்படவில்லை. அதே போல் மற்ற கூட்டுறவு சங்கங்களிலும் மதியம் 2 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வரவில்லை.

இதை கண்டித்து அரசியல் கட்சியினர் திருமானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் அ.தி.மு.க.வை சேர்ந்த முருகானந்தம், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் தனபால் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வராததை கண்டித்து தேர்தல் ஆணையருக்கு கோரிக்கை மனுக்களை 10 பேர் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்தனர். மேலும், திருமானூர் அருகே உள்ள அரண்மனைக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வேட்புமனு வாங்க தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வராததை கண்டித்து திருமழப்பாடி சாலையில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story