மாவட்ட செய்திகள்

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு + "||" + Water opening in Karnataka dams: 25 thousand cubic feet a day for water from Hogenakkal

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20,800 கனஅடி தண்ணீர் வருகிறது
தர்மபுரி,

கர்நாடகா, கேரள மாநிலங்களில் கனமழை பெய்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனிடையே மழை பெய்வது குறைந்ததால் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டது.


இந்தநிலையில் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடை பாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போலீசார் நுழைவு வாயிலை பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க அனுமதி அளித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து கோத்திக்கல் பரிசல்துறையில் இருந்து மணல் திட்டு வரை காவிரி ஆற்றில் சவாரி செய்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அளந்து கண்காணித்து வருகின்றனர்.

கடந்த வாரம் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. நேற்று முன்தினம் காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நிலையில் நேற்று கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்பட்டது.

இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 20,742 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 20,800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.